சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (27). சேலம் லீ பஜாரில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி வித்யா. இந்தத் தம்பதிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சாய் ரித்விக் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது.
குடிப்பழக்கம் உள்ள விஜயகுமார், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆறு மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே, ஒரு மாதத்திற்கு முன்பு வித்யாவிடம் இருந்த குழந்தையை விஜயகுமார் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ஆட்டையாம்பட்டியில் வசிக்கும் தனது தந்தை மற்றும் சகோதரிகளின் பராமரிப்பில் குழந்தையை விட்டுவிட்டு வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 11-ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில், விஜயகுமார் தனது மகன் சாய் ரித்விக்கை வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாத விரக்தியிலும் ஆத்திரத்திலும் இருந்த விஜயகுமார், நள்ளிரவு சுமார் 12 மணியளவில், தனது பெரியப்பா மகள் ரூபாஸ்ரீக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாததால் குழந்தையுடன் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்ததுடன், தான் இருக்கும் இடத்தின் லொகேஷனையும் பகிர்ந்துள்ளார். மேலும், தனது மனைவி வித்யாவையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதுகுறித்துத் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர் பதறிப்போய் விஜயகுமாரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தனர். அதற்குள் அவர் மகுடஞ்சாவடி – வீரபாண்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற கூட்ஸ் ரயில் முன், தன் பிஞ்சு மகனுடன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த கோர விபத்தில் விஜயகுமாரும், ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை சாய் ரித்விக்கும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த ஈரோடு ரயில்வே போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பிஞ்சு மகனுடன் சேர்ந்து தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.