ரூ.1 கோடி பணம்… ரூ.50 கோடி நில ஆவணங்கள்! ‘கட்டப் பஞ்சாயத்து’ பெயரில் மோசடி? – கொ.ம.தே.க பொருளாளர் கே.கே.சி.பாலு மீது பரபரப்பு புகார்
பள்ளி நிர்வாகப் பிரச்சினையை பேசி தீர்த்து வைப்பதாகக் கூறி ரூ.1 கோடி பணத்தையும், சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலங்களின் அசல் பத்திரங்களையும் பெற்றுக்கொண்டு, அவற்றை திருப்பித் தராமல் மிரட்டுவதாக கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈங்கூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி அளித்துள்ள இந்தப் புகாரில், பள்ளி நிர்வாகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி பணம் மற்றும் நில ஆவணங்கள் பெற்றதாகவும், அரசியல் முக்கியப் புள்ளிகள் சிலர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனவும் அதிரடி கிளப்பியிருக்கிறார் பள்ளி நிர்வாகத்தில் பிரச்சினை… ‘பஞ்சாயத்து’க்கு சென்ற விவகாரம்! ஈஸ்வரமூர்த்தி அளித்துள்ள புகாரில், “ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈங்கூர் கிராமத்தில், ஸ்ரீ மகா கல்வி அறக்கட்டளையின் கீழ், 2014-ம் ஆண்டு முதல் மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியை நான் நடத்தி வருகிறேன். பள்ளியின் தாளாளராக இருந்த பிரவீன், பள்ளி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளைச் செய்தார். எனவே, அவரை பள்ளி நிர்வாகத்தில் இருந்து நீக்கிவிட்டோம். அதனையடுத்து, சென்னிமலை தி.மு.க., ஒன்றியச் செயலாளர் பிரபு மற்றும் சென்னிமலை தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் (எ) சுப்பிரமணி ஆகியோருடன் பிரவீன் சேர்ந்துகொண்டு, பள்ளி சொத்துகளை அபகரிக்க முயன்றார். இப்படியான சூழலில், இந்தப் பிரச்சினையைப் பேசி தீர்த்து வைப்பதாகக் கூறி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளரான கே.கே.சி. பாலு, அ.தி.மு.க., முன்னாள் பெருந்துறை தொகுதி செயலாளர் திங்களூர் கந்தசாமி, கொ.ம.தே.க ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பவானியைச் சேர்ந்த கொங்கு ராஜா ஆகியோர் முன்வந்தனர். ‘முன்பணமாக ரூ.1 கோடி… அசல் பத்திரங்களையும் கொடுங்கள்!’ 2025 செப்டம்பர் 1-ம் தேதி பெருந்துறை பேருந்து நிலையம் அருகே உள்ள கே.கே.சி.பாலுவின் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வரச் சொன்னவர்கள், ‘பள்ளி நிர்வாகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு முன்பணமாக ரூ.1 கோடியும், பள்ளியின் பெயரில் உள்ள நிலங்களின் அசல் பத்திரங்களையும் வழங்க வேண்டும்’ எனக் கூறினர். இதனை நம்பி அறக்கட்டளை உறுப்பினர்கள் 15 பேரும் கடன் பெற்று, 2025 செப்டம்பர் 9-ம் தேதி ரூ.1 கோடி பணத்தையும், மூன்று நிலங்களின் அசல் பத்திரங்களையும் ஒப்படைத்தேன். ‘பள்ளியை விற்றுவிடு’… மிரட்டல் விடுத்தாரா கே.கே.சி.பாலு? பணம் மற்றும் ஆவணங்களை பெற்றுக்கொண்ட பின்னரும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. ஒருகட்டத்தில், ‘பள்ளியை விற்றுவிட்டால் பிரச்னை முடிந்துவிடும்’ எனக்கூறிய கே.கே.சி.பாலு, ‘நான் சொல்லும் ரேட்டுக்கு, நான் சொல்லும் நபருக்கு பள்ளியை எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில், என்னிடம் உள்ள ரூ.1 கோடி பணத்தையும், மூன்று அசல் ஆவணங்களையும் திருப்பித் தர முடியாது. ஆவணங்களை வைத்து நான் பள்ளியை விற்றுவிடுவேன்’ என மிரட்டினார். ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள்! ரூ.1 கோடி பணமும், சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலங்களின் மூன்று அசல் பத்திரங்களும் வழங்கப்பட்டு 11 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், இன்னும் அவற்றை திருப்பித் தராமல் நம்பிக்கை மோசடி செய்து, கட்டப்பஞ்சாயத்து செய்து, சொத்துகளை எழுதிக் கொடுக்க மிரட்டிவருகின்றனர். எனவே, கே.கே.சி. பாலு மற்றும் மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நான் கொடுத்த ரூ.1 கோடி பணத்தையும், மூன்று நிலங்களின் அசல் ஆவணங்களையும் மீட்டுத் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். புகாரளித்த ஈஸ்வரமூர்த்தியிடம் பேசினோம். “தாளாளராக இருந்து பள்ளியில் பல்வேறு முறைகேடுகளைச் செய்த பிரவீன் வேறு யாருமல்ல, என்னுடைய இரண்டாவது மருமகன் தான். இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தே, கே.கே.சி.பாலுவிடம் பஞ்சாயத்துக்கு சென்றேன். ஆனால், என்னிடம் ஒருகோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை வாங்கிக்கொண்டு, திருப்பித் தராமல் மோசடி செய்து வருகின்றனர். கே.கே.சி.பாலுவை நல்லவர் என்று நினைத்திருந்தேன். அவர் இப்படியெல்லாம் செய்வார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக எனக்கு மிரட்டல் விடுத்த வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. பள்ளி சொத்து முறைகேடு தொடர்பாக இதுவரை சுமார் 15 முறை புகார் கொடுத்திருப்பேன். ஆனால், எந்தவொரு நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இப்போதாவது என்னுடைய பணம் மற்றும் சொத்து ஆவணங்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். – தி வெஸ்ட் செய்திப் பிரிவு ***** 📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

