TNPSC உறுப்பினர் பதவிக்கு ரூ.2 கோடி ‘டீல்’! – ஈரோடு கல்லூரி முதல்வர் சிக்கியது எப்படி?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி, அரசு கல்லூரி பேராசிரியரிடம் ரூ.2 கோடி பெற்றதாக எழுந்த புகாரில், ஈரோட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் சுரேஷ்குமாரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (48), தனியார் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் முதல்வராக பணியாற்றியவர். டிஎன்பிஎஸ்சி -யில் தனக்கு உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்புகள் இருப்பதாகவும், அதன் மூலம் உறுப்பினர் பதவி பெற்றுத் தர முடியும் என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. இதை அறிந்த நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையைச் சேர்ந்த அரசு கல்லூரி பேராசிரியர் மாணிக்கவாசகன், தனது மனைவிக்கு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி பெற்றுத் தர சுரேஷ்குமாரை அணுகியுள்ளார். இதற்காக ரூ.2 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், பணத்தை பெற்ற பிறகும் பதவியை பெற்றுத் தராமல் சுரேஷ்குமார் காலம் கடத்தியதாகவும், இதையடுத்து மாணிக்கவாசகன் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஈரோட்டில் இருந்த சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

விசாரணையில், இதேபோன்று டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் சுரேஷ்குமார் பணம் பெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி, தர்மபுரியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.70 லட்சம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி, சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 லட்சம் என பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மோசடியில் சென்னையைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். சுரேஷ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள அந்த நபரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

பிற செய்திகள்

Scroll to Top