August 21, 2026

தமிழ்நாடு, தலைப்புச் செய்திகள்

‘கேமரா முன் சிந்திய கண்ணீரை விட..!’ – 94 ஆண்டுகால ‘சௌகார்’ சகாப்தம் ஓய்ந்தது!

தமிழ் சினிமாவின் ‘பீஷ்மர்’ – நடிகை நடிப்பை வெறும் தொழிலாகப் பார்க்காமல், வாழ்வின் இயல்பான உணர்ச்சிகளாக திரையில் பிரதிபலித்த தமிழ் சினிமாவின் ‘பீஷ்மர்’ – நடிகை சௌகார் ஜானகி. 94 வயதான அவர் இதய நோய் பாதிப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (21.08.2026) மதியம் 1.59 மணிக்கு காலமானார். 1931-ல் பிறந்த சௌகார் ஜானகி, வெறும் நடிகை மட்டுமல்ல; தென்னிந்திய திரைத்துறையின் தலைமுறை மாற்றங்களைக் கண்ட சாட்சி, பல தலைமுறை பெண்களுக்கு நம்பிக்கை தந்த வழிகாட்டி. ‘சௌகார்’ என்ற முகவரி! 1950-ல் ‘சௌகார்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த முதல் படமே அவரது பெயருக்கு நிரந்தர முகவரியாக மாறக்கூடும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தன் ஆளுமையை நிலைநாட்டினார். பாலும் பழமும், பார் மகளே பார், புதிய பறவை, இரு கோடுகள், எதிர்நீச்சல், தில்லுமுல்லு என அவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தமிழ் சினிமாவின் பொற்கால ஏடுகள். நகைச்சுவை, சோகம், கம்பீரம், கோபம் என எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதில் இயல்பான ‘சௌகார் பாணி’ மிளிரும். “வாழ்க்கை எனக்கு எல்லாவற்றையும் எளிதாகத் தரவில்லை. ஆனால், நான் எதற்காகவும் யாரிடமும் கையேந்தி நின்றதில்லை. கேமராவுக்கு முன்னால் நான் அழுத கண்ணீரை விட, என் சுய வாழ்க்கையில் சிந்திய கண்ணீர் அதிகம். ஆனால், அந்த அனுபவங்கள் தான் என்னை இத்தனை வலுவான பெண்ணாக மாற்றின” எனச் சொன்ன செளகார் ஜானகிக்கு, இளமையிலேயே திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முறிவுகள், பொருளாதாரச் சிரமங்கள், மற்றும் தன் குழந்தைகளைத் தனியாக வளர்த்து ஆளாக்க அவர் சந்தித்த போராட்டங்கள் என திரைக்கு வெளியேயும் கண்ணீரும் வலியும் நிறைந்ததே அவரது வாழ்க்கை. ஆனால், ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் தனது பலமாக மாற்றிக்கொண்டு, தனக்கென ஒரு பாதையை உருவாக்கி, தலைமுறைகள் வியக்கும் ஒரு கலைஞராக உயர்ந்தார். கலை இருக்கும் வரை, உணர்ச்சிகள் வெளிப்படும் வரை, ‘சௌகார்’ என்ற அந்த கம்பீரக் குரலும், அவரது கனிவான புன்னகையும் தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டே இருக்கும்.

சினிமா

பாக்ஸ் ஆபீஸில் லோகேஷ் கனகராஜ் ‘சம்பவம்’ – வசூல் இத்தனை கோடியா?

இயக்குநராக பல வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக கதாநாயகனாக களமிறங்கிய ‘டிசி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் ‘தேவதாஸ்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் மாஸான நடிப்பை லோகேஷ் வெளிப்படுத்தியுள்ளார்.அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசையும் பாடல்களும் திரையரங்குகளில் ரசிகர்களைக் கொண்டாட வைத்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாகி 15 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநராக ‘மாநகரம்’, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ என தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்த லோகேஷ், தற்போது நடிகராகவும் அறிமுகப் படத்திலேயே ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து தமிழ் சினிமா வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

TNPSC உறுப்பினர் பதவிக்கு ரூ.2 கோடி ‘டீல்’! – ஈரோடு கல்லூரி முதல்வர் சிக்கியது எப்படி?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி, அரசு கல்லூரி பேராசிரியரிடம் ரூ.2 கோடி பெற்றதாக எழுந்த புகாரில், ஈரோட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் சுரேஷ்குமாரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (48), தனியார் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் முதல்வராக பணியாற்றியவர். டிஎன்பிஎஸ்சி -யில் தனக்கு உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர்புகள் இருப்பதாகவும், அதன் மூலம் உறுப்பினர் பதவி பெற்றுத் தர முடியும் என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. இதை அறிந்த நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையைச் சேர்ந்த அரசு கல்லூரி பேராசிரியர் மாணிக்கவாசகன், தனது மனைவிக்கு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி பெற்றுத் தர சுரேஷ்குமாரை அணுகியுள்ளார். இதற்காக ரூ.2 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பணத்தை பெற்ற பிறகும் பதவியை பெற்றுத் தராமல் சுரேஷ்குமார் காலம் கடத்தியதாகவும், இதையடுத்து மாணிக்கவாசகன் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஈரோட்டில் இருந்த சுரேஷ்குமாரை கைது செய்தனர். விசாரணையில், இதேபோன்று டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் சுரேஷ்குமார் பணம் பெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி, தர்மபுரியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.70 லட்சம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி, சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 லட்சம் என பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மோசடியில் சென்னையைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். சுரேஷ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள அந்த நபரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

மாவட்டம்

திருப்பூரில் நடக்க இருக்கும் 10 கி.மீ. மராத்தான்… எதற்காக தெரியுமா?

திருப்பூர்: குப்பையும் புதர்களும் மண்டிக் கிடக்கும் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக, ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூரில் வரும் 22-ம் தேதி மராத்தான் போட்டி நடைபெற உள்ளது. கோவையில் தொடங்கி கரூரில் காவிரியுடன் கலக்கும் சுமார் 160 கி.மீ. நீளமுள்ள நொய்யல் ஆற்றை சீரமைக்கும் பணியை, திருப்பூர் தொழில்துறையினரால் தொடங்கப்பட்டுள்ள ‘உதயம்’ அமைப்பு மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் முதல் மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றுதல், புதர்களை நீக்குதல், தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நொய்யல் ஆற்றில் குப்பை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்; ஆற்றை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்பதை வலியுறுத்தி நொய்யல் ஆற்றுப்படுகை சாலையில் 10 கி.மீ. மராத்தான் மற்றும் 5 கி.மீ. வாக்காத்தான் நடைபெறுகிறது. இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ள நிலையில், முன்பதிவு செய்யாதவர்களும் போட்டியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று நொய்யல் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ‘உதயம்’ அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர். நொய்யலின் 160 கி.மீ. முழுவதையும் தூய்மைப்படுத்துவதே இலக்கு; அரசின் அனுமதி பெற்று அடுத்தடுத்த பகுதிகளிலும் பணிகள் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top