பண்டிகை காலம் நெருங்கும் நேரத்தில் சர்க்கரை விலை உச்சத்தைத் தொட்டுள்ளதால், பொதுமக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் சர்க்கரை தட்டுப்பாடு, பண்டிகை கால தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மகாராஷ்டிராவில் சர்க்கரை விலை கிலோ ரூ.46 வரை உயர்ந்துள்ளது. இதனால் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு அவசர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்வதற்கான 100 சதவீத இறக்குமதி வரியை குறைப்பது அல்லது முழுமையாக நீக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையான சூழல் ஏற்பட்டால் சுமார் 10 லட்சம் டன் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சர்க்கரைக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சந்தையில் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க பதுக்கலுக்கு ‘செக்’ வைக்கும் வகையில் இருப்பு கட்டுப்பாடுகள், சர்க்கரை ஆலைகளின் இருப்பு வரம்பை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமின்றி, எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரையை பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்தி, அந்த சர்க்கரையை உள்நாட்டு சந்தைக்கு திருப்பிவிடும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட முக்கிய சர்க்கரை உற்பத்தி மாநிலங்களில் கரும்பு அரவையை வழக்கத்தைவிட 10 முதல் 15 நாட்களுக்கு முன்பே தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.