“போலீஸ் அடித்ததால் இறந்தாரா?” – பரமசிவம் மரணத்தில் மதுரை போலீஸ் பகீர் விளக்கம்!

மதுரையில் ஜோதிடரும் கோயில் பூசாரியுமான பரமசிவம் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், “போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்தார்” என குடும்பத்தினர் சுமத்திய குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் மதுரை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. போலீஸ் தரப்பின்படி, ஜூலை 17-ம் தேதி பரமசிவத்துக்கும் அருகில் வசித்த தம்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது; இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஜூலை 23-ல் கைது செய்யப்பட்டு, பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஜூலை 24-ம் தேதி வீட்டில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதாக கூறிய பரமசிவம், ஆகஸ்ட் 5-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது போலீசாரிடம், “தவறி விழுந்தேன்; போலீஸ் நடவடிக்கை தேவையில்லை” என அவரே தெரிவித்ததாகவும், அது காவல் நிலைய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் கூறியுள்ளது.

இதற்கிடையே, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியும் அதை ஏற்காமல் பரமசிவம் ஆகஸ்ட் 6-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாகவும், பின்னர் உடல்நிலை மோசமடைந்து ஆகஸ்ட் 16-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. ஆனால், “காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால்தான் கணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்” என அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளதால் சர்ச்சை நீடிக்கிறது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதுடன், மாஜிஸ்திரேட் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் அறிக்கை அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Scroll to Top