கோவை ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ.கோலி’! பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CAG அறிக்கை

கோவை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் ‘ஈ.கோலி’ (E. coli) பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய தலைமைத் தணிக்கைத் துறை (CAG) வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களில் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்தபோது, கோவை உள்ளிட்ட 8 நிலையங்களின் குடிநீர் மாதிரிகளில் ஈ.கோலி பாக்டீரியா கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கழிவுநீர் அல்லது மனித, விலங்குகளின் கழிவுகள் குடிநீரில் கலந்திருப்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக ஈ.கோலி கருதப்படுகிறது. மேலும், குடிநீரில் குளோரின் அளவு மற்றும் பாக்டீரியாவியல், ரசாயன பரிசோதனைகள் உரிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் CAG சுட்டிக்காட்டியுள்ளது. 

கோவை மட்டும் அல்ல… நாடு முழுவதும் ரயில் நிலையங்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் CAG அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 512 ரயில் நிலையங்களில் 89 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலையங்களில் குடிநீர், கழிப்பறை, இருக்கை, நடைமேடை நிழற்கூரை உள்ளிட்ட குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், ரயில் நிலையங்களில் சுமார் 20,000 இடங்களில் ‘டேங்க் டு டேப்’ நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவவும், குடிநீர் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். “தாகம் தீர்க்க ரயில் நிலையத்தில் குடிக்கும் தண்ணீரே… உடலுக்கு ஆபத்தாக மாறிவிடுமா?” என்ற கேள்வியை கோவை சம்பவம் எழுப்பியுள்ளது.

பிற செய்திகள்

Scroll to Top