திருப்பூரில் நடக்க இருக்கும் 10 கி.மீ. மராத்தான்… எதற்காக தெரியுமா?

திருப்பூர்: குப்பையும் புதர்களும் மண்டிக் கிடக்கும் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக, ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூரில் வரும் 22-ம் தேதி மராத்தான் போட்டி நடைபெற உள்ளது.

கோவையில் தொடங்கி கரூரில் காவிரியுடன் கலக்கும் சுமார் 160 கி.மீ. நீளமுள்ள நொய்யல் ஆற்றை சீரமைக்கும் பணியை, திருப்பூர் தொழில்துறையினரால் தொடங்கப்பட்டுள்ள ‘உதயம்’ அமைப்பு மேற்கொண்டு வருகிறது. கடந்த மாதம் முதல் மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றுதல், புதர்களை நீக்குதல், தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, நொய்யல் ஆற்றில் குப்பை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்; ஆற்றை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்பதை வலியுறுத்தி நொய்யல் ஆற்றுப்படுகை சாலையில் 10 கி.மீ. மராத்தான் மற்றும் 5 கி.மீ. வாக்காத்தான் நடைபெறுகிறது. இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ள நிலையில், முன்பதிவு செய்யாதவர்களும் போட்டியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று நொய்யல் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ‘உதயம்’ அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர். நொய்யலின் 160 கி.மீ. முழுவதையும் தூய்மைப்படுத்துவதே இலக்கு; அரசின் அனுமதி பெற்று அடுத்தடுத்த பகுதிகளிலும் பணிகள் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Scroll to Top