பங்குச்சந்தையில் ‘மாஸ்’ காட்டிய ஈரோடு நிறுவனம்! – முதலீட்டாளர்களுக்கு இவ்வளவு லாபமா?

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ‘மில்கிமிஸ்ட்’, பங்குச்சந்தையில் காலடி எடுத்து வைத்த குறுகிய நேரத்திலேயே முதலீட்டாளர்களுக்கு அபார லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. சுமார் ரூ.1,553 கோடி நிதியைத் திரட்டும் நோக்கில் வெளியிடப்பட்ட இந்த ஐபிஓ, தொடக்கத்திலேயே முதலீட்டாளர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, பொதுப் பங்கு விற்பனையின் போதே இத்துறைக்கான பங்குகள் 56 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு சாதனை படைத்தது.

மும்பை பங்குச்சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தையில் (NSE) மில்கிமிஸ்ட் பங்குகள், அதன் தொடக்க விற்பனை விலையான ரூ.140-ஐ விட 18% கூடுதலாக, அதாவது ரூ.165-க்கு பட்டியலிடப்பட்டு மாஸ் என்ட்ரி கொடுத்தன. வர்த்தகம் தொடங்கிய முதல் நாளிலேயே 10% உயர்ந்து ‘அப்பர் சர்க்கியூட்’ அடித்த இந்த பங்கு, அடுத்தடுத்த வர்த்தக நாட்களிலும் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு ரூ.211.80 வரை உயர்ந்தது. இதன் மூலம் ஐபிஓ ஆரம்ப விலையில் இருந்து முதலீட்டாளர்களுக்குக் குறுகிய காலத்தில் 51% வரையிலான லாபம் கிடைத்துள்ளது.

பங்குகளின் இந்த அதிரடி விலையேற்றத்தைத் தொடர்ந்து, மில்கிமிஸ்ட் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.15,000 கோடியைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தென்னிந்தியாவில் பன்னீர், சீஸ், தயிர் மற்றும் வெண்ணெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் சந்தையில் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ள இந்நிறுவனம், ஐபிஓ மூலம் திரட்டிய நிதியைக் கொண்டு தங்களது கடன் சுமையைக் கணிசமாகக் குறைக்கவும், ஈரோடு பெருந்துறையில் அமைந்துள்ள அதிநவீன உற்பத்தி ஆலையை மேலும் விரிவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

பிற செய்திகள்

Scroll to Top