ஈரோடு புதுமை காலனி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஆறுச்சாமி (வயது 22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பவரும் அந்த இளம்பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த விவகாரம் தெரிய வந்ததும் ஆறுச்சாமி கடும் ஆத்திரமடைந்தார்.
ஆறுச்சாமி, தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு கார்த்திக்கிடம் சென்று “என் காதலிகிட்ட இனிமேல் நீ போன்ல பேசுனா நடக்கிறதே வேற, ஜாக்கிரதையா இருந்துக்கோ!” என மிரட்டியுள்ளார். ஆனால், கார்த்திக்கோ, “நான் அப்படித்தான் பேசுவேன். என்ன பண்ணுவ?” என பதிலுக்கு எகிற, வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது, ஆறுச்சாமி தான் மறைத்து வைத்திருந்த ஆடு வெட்டும் கத்தியை எடுத்து கார்த்திக்கின் தலையில் ஓங்கி வெட்டியுள்ளார். இதில் கார்த்திக்கின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
கார்த்திக் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக கார்த்திக் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுச்சாமி மற்றும் அவரது கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.