September 14, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சொந்தப் பேரனை சீரழித்த பாட்டி! – ஈரோட்டை அதிரவைத்த பாலியல் சம்பவம்

பாசத்திற்குப் பெயர்போன பாட்டியின் அரவணைப்பில் பேரக்குழந்தைகள் பாதுகாப்புடன் வளர்வதுதான் வழக்கம். ஆனால், ஈரோட்டில் சொந்தப் பேரனையே பாலியல் சித்ரவதை செய்துவந்த பாட்டியின் கொடூர முகம் அம்பலமாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு லக்காபுரம் பகுதியைச் சேர்ந்த 46 வயது பெண்மணி அவர். திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவரால் கைவிடப்பட்டு தனியாக வசித்து வருகிறார். இவரது 31 வயது மகள் பியூட்டி பார்லரிலும், மருமகன் சமையல் மாஸ்டராகவும் உள்ளனர். இவர்களது 12 வயது மகன் ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான். பெற்றோர் இருவருமே வேலைக்குச் சென்று விடுவதால், சிறுவன் வீட்டில் தனியாக இருக்கக் கூடாது என, பள்ளி விடுமுறை நாட்களில் பேரனைப் பாட்டியின் வீட்டில் கொண்டு போய் விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.  பள்ளிக்குத் தொடர் விடுமுறை விடப்பட்டதால், 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போலச் சிறுவனைப் பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்ல பெற்றோர் முயன்றுள்ளனர். ஆனால், பாட்டி வீட்டிற்குச் செல்ல மறுத்து அழுது அடம் பிடித்துள்ளான். சந்தேகமடைந்த பெற்றோர் அவனிடம் கனிவாக என்ன நடந்தது என விசாரித்துள்ளனர்.  அப்போதுதான் அந்தச் சிறுவன் கூறிய உண்மை பெற்றோரின் தலையில் இடியாய் இறங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் பாட்டி வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம், அந்த 46 வயது பாட்டி தனக்குப் பாலியல் ரீதியாகத் தொடர் தொல்லைகளும் சித்ரவதைகளும் கொடுத்து வந்ததாகச் சிறுவன் அழுதுகொண்டே கூறியுள்ளான். இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். தன் மகனுக்கு நேர்ந்த கொடுமை குறித்துச் சிறுவனின் பெற்றோர் உடனடியாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து போலீசார் 46 வயது பாட்டி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சொந்தப் பேரனுக்கே பாட்டி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“ஐயோ போச்சே..!” – மகளின் 12 பவுன் திருமண நகையை பஸ்ஸில் பறிகொடுத்த தாய்

ஈரோடு மாவட்டம், பவானி காவிரி வீதியைச் சேர்ந்தவர் அமுதவள்ளி (வயது 48). இவரது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. மகளுக்காக சிறுகச் சிறுகச் சேர்த்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் 60 கிராம் வெள்ளிப் பொருட்களை, ஈரோடு நாட்ராயன் கோவில் வீதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் அமுதவள்ளி பாதுகாப்பாகக் கொடுத்து வைத்திருந்துள்ளார்.  திருமணத் தேதி நெருங்கியதால், ஈரோடு உறவினர் வீட்டிற்குச் சென்றவர், அவர்களிடம் கொடுத்து வைத்திருந்த தங்க நகைகளை வாங்கி, ஒரு பையில் பத்திரமாக எடுத்துக்கொண்டு பவானிக்குத் திரும்பினார். ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பவானி செல்ல அரசு டவுன் பஸ்ஸில் ஏறிய அமுதவள்ளி, கூட்டம் அதிகமாக இருந்ததாலும், நகைப் பை கைநழுவி கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்திலும், தனக்கு அருகில் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம், “கொஞ்சம் இந்த பையை பிடிச்சுக்கோங்க அக்கா” எனக் கூறி நகைப் பையைக் கொடுத்துள்ளார். பஸ் ஈரோடு கோணவாய்க்கால் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, சீட்டில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி நகைப் பையோடு சத்தமில்லாமல் பேருந்திலிருந்து கீழே இறங்கிச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்த அமுதவள்ளி, தன் கைப்பையை வைத்திருந்த பெண் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, “ஐய்யோ… என் மகளோட கல்யாண நகை போச்சே!” எனக் கத்திக்கதறி கூச்சல் போட்டுள்ளார். உடனே, கண்டக்டர் பஸ்ஸை ஓரங்கட்டி நிறுத்தி, பஸ்ஸில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தியுள்ளார். ஆனால், நகை வைத்திருந்த பெண் ஏற்கனவே இறங்கிச் சென்றுவிட்டதால் நகை கிடைக்கவில்லை. இதையடுத்து, இழந்த தன்னுடைய நகையை மீட்டுத்தரச் சொல்லி, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அமுதவள்ளி கண்ணீருடன் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகையோடு தப்பிச் சென்ற பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“என் ஆளுகிட்ட பேசுவியா..!” – இளைஞரை கத்தியால் வெட்டிய காதலன் 

ஈரோடு புதுமை காலனி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஆறுச்சாமி (வயது 22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பவரும் அந்த இளம்பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த விவகாரம் தெரிய வந்ததும் ஆறுச்சாமி கடும் ஆத்திரமடைந்தார். ஆறுச்சாமி, தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு கார்த்திக்கிடம் சென்று “என் காதலிகிட்ட இனிமேல் நீ போன்ல பேசுனா நடக்கிறதே வேற, ஜாக்கிரதையா இருந்துக்கோ!” என மிரட்டியுள்ளார். ஆனால், கார்த்திக்கோ, “நான் அப்படித்தான் பேசுவேன். என்ன பண்ணுவ?” என பதிலுக்கு எகிற, வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது, ஆறுச்சாமி தான் மறைத்து வைத்திருந்த ஆடு வெட்டும் கத்தியை எடுத்து கார்த்திக்கின் தலையில் ஓங்கி வெட்டியுள்ளார். இதில் கார்த்திக்கின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. கார்த்திக் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக கார்த்திக் அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுச்சாமி மற்றும் அவரது கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.

Scroll to Top