போலி நகைகளை அடகு வைத்து மோசடி; போலீசில் சிக்கிய இருவர்!

திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கொத்தங்குளத்தைச் சேர்ந்த அஸ்வின் ரங்கேஷ் மற்றும் மணிகண்டன். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். அஸ்வின் ரங்கேஷ் பனியன் கம்பெனியிலும், மணிகண்டன் சுமை தூக்கும் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் முத்தூட் ஃபைனான்ஸில் தங்க நகைகள் எனக்கூறி அடகு வைத்து ரூ.3.50 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்துள்ள நகைகளை மீட்டு விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறி, திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மற்றொரு நகை அடகு நிறுவனத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை அணுகியுள்ளனர். 

அதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி ரூ.3.50 லட்சம் பணத்தை முத்தூட் நிறுவனத்தில் செலுத்த, அடகில் இருந்த நகையை இருவரும் மீட்டுக் கொடுத்துள்ளனர். ஏற்கனவே அடகில் இருந்த நகை என்பதால், அது தங்க நகை தான் என நம்பி கிருஷ்ணமூர்த்தி எடுத்துச் சென்றுள்ளார். அந்த நகைகளை தங்களது நிறுவனத்தில் சோதனை செய்தபோது, அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, கிருஷ்ணமூர்த்தி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான போலீசார், தலைமறைவாக இருந்த மணிகண்டன் மற்றும் அஸ்வின் ரங்கேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top