November 1, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சொந்த ஊருக்குக் கிளம்பும் வடமாநிலத்தவர்கள்… திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்

திருப்பூர் மாநகரில் பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த தொழில் நிறுவனங்களில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.  வடமாநிலங்களில் தீபாவளியைத் தொடர்ந்து கோவர்த்தன் பூஜை, பாய் தூஜ் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜை என அடுத்தடுத்து பண்டிகைகள் நடைபெறுகின்றன. குடும்பத்தினருடன் இணைந்து இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இதனால், வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. போதிய ரயில்கள் இயக்கப்படாததால், டிக்கெட் கிடைக்காத பலரும்  முன்பதிவில்லாத பெட்டிகளில் நெருக்கியடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் ரயில் நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருக்கும் தொழிலாளர்கள், ரயில்கள் வந்ததும் முண்டியடித்துக் கொண்டு ஏறிச் செல்கின்றனர். இன்று காலை திருப்பூரில் இருந்து பீகார் மாநிலம் பரோனி சென்ற சிறப்பு ரயிலிலும் ஏராளமான தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஏறிச் சென்றனர். ரயிலுக்குள் இடம் பிடிப்பதில் பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், சில இடங்களில் வாக்குவாதமும் ஏற்பட்டது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

போலி நகைகளை அடகு வைத்து மோசடி; போலீசில் சிக்கிய இருவர்!

திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கொத்தங்குளத்தைச் சேர்ந்த அஸ்வின் ரங்கேஷ் மற்றும் மணிகண்டன். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். அஸ்வின் ரங்கேஷ் பனியன் கம்பெனியிலும், மணிகண்டன் சுமை தூக்கும் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் முத்தூட் ஃபைனான்ஸில் தங்க நகைகள் எனக்கூறி அடகு வைத்து ரூ.3.50 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்துள்ள நகைகளை மீட்டு விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறி, திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மற்றொரு நகை அடகு நிறுவனத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரை அணுகியுள்ளனர்.  அதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி ரூ.3.50 லட்சம் பணத்தை முத்தூட் நிறுவனத்தில் செலுத்த, அடகில் இருந்த நகையை இருவரும் மீட்டுக் கொடுத்துள்ளனர். ஏற்கனவே அடகில் இருந்த நகை என்பதால், அது தங்க நகை தான் என நம்பி கிருஷ்ணமூர்த்தி எடுத்துச் சென்றுள்ளார். அந்த நகைகளை தங்களது நிறுவனத்தில் சோதனை செய்தபோது, அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்துள்ளது. அதனையடுத்து, கிருஷ்ணமூர்த்தி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான போலீசார், தலைமறைவாக இருந்த மணிகண்டன் மற்றும் அஸ்வின் ரங்கேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Scroll to Top