திருப்பூர் மாநகரில் பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த தொழில் நிறுவனங்களில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
வடமாநிலங்களில் தீபாவளியைத் தொடர்ந்து கோவர்த்தன் பூஜை, பாய் தூஜ் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜை என அடுத்தடுத்து பண்டிகைகள் நடைபெறுகின்றன. குடும்பத்தினருடன் இணைந்து இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இதனால், வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

போதிய ரயில்கள் இயக்கப்படாததால், டிக்கெட் கிடைக்காத பலரும் முன்பதிவில்லாத பெட்டிகளில் நெருக்கியடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் ரயில் நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருக்கும் தொழிலாளர்கள், ரயில்கள் வந்ததும் முண்டியடித்துக் கொண்டு ஏறிச் செல்கின்றனர். இன்று காலை திருப்பூரில் இருந்து பீகார் மாநிலம் பரோனி சென்ற சிறப்பு ரயிலிலும் ஏராளமான தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஏறிச் சென்றனர். ரயிலுக்குள் இடம் பிடிப்பதில் பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், சில இடங்களில் வாக்குவாதமும் ஏற்பட்டது.