ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள செம்மாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (41). இவரது கணவர் அய்யாவு. இவர்களுக்கு மரியா என்ற மகளும், மனோஜ் என்ற மகனும் உள்ளனர். அய்யாவு கடந்த 3 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல், வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார். இதனால் செல்விதான் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். மகள் மரியாவிற்குத் திருமணமான நிலையில், 15 வயதான மகன் மனோஜ் குடும்ப சூழல் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
செல்வி கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவரின் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். மனோஜ் தாயைப் பார்ப்பதற்காக அடிக்கடி அந்தத் தோட்டத்திற்கு வந்து செல்வார். நேற்று (15.09.2026) மாலை 4 மணியளவில் வழக்கம் போல தாய் செல்வியைப் பார்ப்பதற்கு மனோஜ் தோட்டத்திற்கு வந்துள்ளார். சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பியுள்ளார்.
வாழைத் தோப்பு வழியே வீட்டுக்குத் சென்ற நிலையில், காற்று மற்றும் மழையின் காரணமாக அறுந்துக்கிடந்த மின்கம்பியை மனோஜ் எதிர்பாராதவிதமாக மிதிக்க, நொடிப் பொழுதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்த தாய் செல்வியும், தோட்டத்தில் இருந்தவர்களும் பதறியடித்துச் சென்று பார்க்க, மனோஜ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மனோஜை கோபி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.