September 16, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

பறந்து வந்து விழுந்த கார்; ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி – நாமக்கல்லில் சோகம் 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள மோளயாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார் (வயது 35). இவர் கயிறு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். இவரின் மனைவி காவ்யாஸ்ரீ (வயது 34), பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கார்த்திக் குமாரின் தந்தை செல்வராஜ் (வயது 60), தாய் காந்திமதி (55) ஆகியோரும் இவர்களுடன் பெங்களூரூ ஈஜிபுரா பகுதியில் வசித்து வந்தனர். காவ்யாஸ்ரீ தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  இந்நிலையில், கரூரில் உள்ள உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, கார்த்திக் குமார் மற்றும் அவரது பெற்றோர் நேற்று (செப்டம்பர் 15) இரவு பெங்களூருவில் இருந்து கரூருக்கு காரில் கிளம்பியுள்ளார். இன்று (செப்டம்பர் 16) அதிகாலை சுமார் 2 மணியளவில், நாமக்கல் நல்லிபாளையம் அருகே சேலம் – கரூர் பைபாஸில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்திசையில் பெங்களூரூ நோக்கிச் சென்று கொண்டிருந்த தார் ஜீப் ஒன்று, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனைத் தாண்டி பறந்து வந்து, கார்த்திக் குமாரின் காரின் மீது விழுந்ததில், கார் சுக்குநூறாக நொறுங்கியதோடு, காரில் இருந்தவர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லிபாளையம் போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் குமார், அவரது தந்தை செல்வராஜ், தாய் காந்திமதி ஆகிய மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிட்டனர். நல்லிபாளையம் போலீஸார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய தார் ஜீப்பை ஓட்டியவர் பெங்களூரூவைச் சேர்ந்த கிருஷ்ணகவுடா (19) என்பதும், காரில் யதுநாதன் (19), சிவகுமார் (32), கௌதமி (30) என மொத்தம் 4 பேர் பயணித்ததும் தெரியவந்தது. தற்போது நால்வரும் பெங்களூரூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகவுடா ஜீப்பை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஒருவரின் கவனக்குறைவு ஒரு குடும்பத்தையே காவு வாங்கியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

வாழைத் தோப்பில் அலறல் சத்தம்… ஈரோட்டில் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! 

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள செம்மாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (41). இவரது கணவர் அய்யாவு. இவர்களுக்கு மரியா என்ற மகளும், மனோஜ் என்ற மகனும் உள்ளனர். அய்யாவு கடந்த 3 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல், வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார். இதனால் செல்விதான் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். மகள் மரியாவிற்குத் திருமணமான நிலையில், 15 வயதான மகன் மனோஜ் குடும்ப சூழல் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். செல்வி கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவரின் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். மனோஜ் தாயைப் பார்ப்பதற்காக அடிக்கடி அந்தத் தோட்டத்திற்கு வந்து செல்வார். நேற்று (15.09.2026) மாலை 4 மணியளவில் வழக்கம் போல தாய் செல்வியைப் பார்ப்பதற்கு மனோஜ் தோட்டத்திற்கு வந்துள்ளார். சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பியுள்ளார். வாழைத் தோப்பு வழியே வீட்டுக்குத் சென்ற நிலையில், காற்று மற்றும் மழையின் காரணமாக அறுந்துக்கிடந்த மின்கம்பியை மனோஜ் எதிர்பாராதவிதமாக மிதிக்க, நொடிப் பொழுதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.  சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்த தாய் செல்வியும், தோட்டத்தில் இருந்தவர்களும் பதறியடித்துச் சென்று பார்க்க, மனோஜ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மனோஜை கோபி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Scroll to Top