‘லார்கிப்பான்’ குரங்குகள் விவகாரத்தில் திடீர் ‘ட்விஸ்ட்’! – வனத்துறையின் நடவடிக்கைக்கு அதிரடித் தடை

நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ மூலம் பரபரப்பை ஏற்படுத்திய லார்கிப்பான் குரங்குகள் விவகாரத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் உள்ள லார்கிப்பான் குரங்குடன் நடிகர் விக்ரம் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வனத்துறையினரின் விசாரணையில் விக்ரம் வீடியோவில் இருந்த லார்கிப்பான் குரங்கு, ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கேசவநாதனிடமிருந்து பெறப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து, பெருந்துறை அருகேயுள்ள கேசவநாதனின் பண்ணையில் வனத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், லார்கிப்பான் குரங்குகள், ஆப்பிரிக்கன் சர்வல் பூனைகள் உள்ளிட்ட அரியவகையைச் சேர்ந்த 11 விலங்குகள் முறையான ஆவணங்களின்றி, வளர்க்கப்பட்டது தெரியவந்தது. 

அதனைத்தொடர்ந்து, விலங்குகளை பறிமுதல் செய்து கேசவநாதன் மீது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் உயிருடன் உள்ள விலங்கினங்கள் தொடர்பான விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது.

இதற்கு அனுமதி கோரி, வனத்துறை சார்பில் பெருந்துறை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு கேசவநாதன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மூர்த்தி, பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், தற்காலிகமாக 11 விலங்குகளையும் கேசவநாதனின் கட்டுப்பாட்டிலேயே வைத்து பராமரிக்ககவும் உத்தரவிட்டார். 

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top