September 5, 2026

மாவட்டம்

100% தேர்ச்சி முதல் பசுமைப் புரட்சி வரை! – ஈரோடு ஆசிரியருக்கு  ‘நல்லாசிரியர் விருது’

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் விவசாயப் பிரிவு ஆசிரியராக பணியாற்றி வருபவர் கந்தன் (வயது 59). பணியில் சேர்ந்தது முதல் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும், பள்ளி வளாகத்தின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக தனது கற்பித்தல் பணியின் மூலம் விவசாயப் பிரிவு மாணவர்கள் 100 சதவிகித தேர்ச்சி பெறுவதை உறுதி செய்து வருகிறார். தனது மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதோடு நின்றுவிடாமல், அவர்களின் எதிர்காலத்திற்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறார். அவரது வழிகாட்டுதலில் பயின்ற பல மாணவர்கள் கால்நடை மருத்துவர்களாகவும், விவசாயத்துறை அதிகாரிகளாகவும் உருவாகியுள்ளனர்.  கல்விப் பணியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தனி கவனம் செலுத்திய ஆசிரியர் கந்தன், மரக்கன்றுகள் நடுதல், பள்ளி வளாகத்தை பசுமையாக பராமரித்தல் உள்ளிட்ட பணிகளின் மூலம் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளார். பள்ளியை பசுமைப் பூங்காவாக மாற்றியதற்காக அவரது பணியைப் பாராட்டி, கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசின் ‘பசுமை முதன்மையாளர் விருது’ வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக 2025ஆம் ஆண்டு தமிழக அரசின் ‘மஞ்சப்பை விருது’ அவருக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என இரு தளங்களிலும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வரும் ஆசிரியர் கந்தனின் சேவையைப் பாராட்டும் வகையில், 2026ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘நல்லாசிரியர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருது பெற்றுள்ள ஆசிரியர் கந்தனுக்கு சக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கந்தனைப் பாராட்டும் வகையில், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

8 கோடி பங்களா; 7 கிலோ தங்கம், 27 லட்சம் பணம்! – சேலத்தில் சிக்கிய பலே ‘புரோக்கர்’ 

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள சிவம்பட்டியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பிரதாப் (வயது 41). தனது கல்குவாரியை விரிவாக்கம் செய்ய அனுமதி கேட்டு, ஓசூரில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமனை சந்தித்துள்ளார். ஆவணங்களைப் பார்த்த அதிகாரி, “15 லட்சம் ரூபாய் கொடுங்க… சுற்றுச்சூழல் அனுமதிச் சான்றிதழ் உடனே கைக்கு வரும்!” எனத் தடாலடியாக லஞ்சம் கேட்டிருக்கிறார். ‘15 லட்சமா?’ என பிரதாப் அதிர்ந்துபோக, மனமிறங்கி லஞ்சத் தொகையை 10 லட்சமாக குறைத்துக் கொண்ட அதிகாரி புருஷோத்தமன், “முதல் தவணையாக 3 லட்ச ரூபாயை சேலத்துல இருக்குற என் ஏஜென்ட் சிவக்குமார்கிட்ட கொடுத்திடுங்க” எனக் கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரதாப், நேராக லஞ்ச ஒழிப்புத் துறையின் கதவுகளைத் தட்டினார். சேலம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான அதிரடிப் படை, ரசாயனம் தடவிய 3 லட்ச ரூபாயை தொழிலதிபர் பிரதாப்பிடம் கொடுத்து அனுப்பியது. திட்டமிட்டபடி சேலம் ஐந்து சாலை சந்திப்பில் வைத்து, இடைத்தரகர் சிவக்குமார் அனுப்பிய உதவியாளரான முருகன் அந்தப் பணத்தை வாங்கிய நொடியில், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அவரைப் பொறிவைத்து மடக்கிப் பிடித்தனர். முருகன் கொடுத்த தகவலின் பேரில் சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன் மற்றும் இடைத்தரகர் சிவக்குமார் ஆகிய இருவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, சேலம் தாசநாயக்கன்பட்டியில் உள்ள இடைத்தரகர் சிவக்குமாரின் வீட்டிற்குச் சோதனையிடச் சென்ற லஞ்ச ஒழிப்புப் படையினருக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வெறும் இடைத்தரகரான சிவக்குமார், சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் அரண்மனை போல் கட்டியிருந்த பிரமாண்ட பங்களாவைக் கண்டு அதிகாரிகள் வாயடைத்துப் போயினர். அந்த வீட்டில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், 7 கிலோ தங்கம், 27 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் அவர் ஆஸ்திரேலியாவில் பல கோடிகளை முதலீடு செய்ததற்கான அதிர்ச்சி தரும் ஆவணங்கள் சிக்கின. ஒரு சாதாரண இடைத்தரகரான சிவக்குமார், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் பலருடன் தொடர்பில் இருந்துவந்ததும், அவர்களோடு கூட்டுசேர்ந்து பல நூறு கோடிகளைச் சுருட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிவக்குமார் ஜாமீனில் வெளியே வந்து வெளிநாடு தப்பி ஓடாமல் இருக்க, அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தயாராகி வருகின்றனர்.  மேலும், இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகள், அதிகாரிகளை மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறப்படும் போலி சமூக ஆர்வலர்கள் மற்றும் போலி பத்திரிகையாளர்கள் குறித்த தகவல்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திரட்டி வருகின்றனர். அவர்களின் தொடர்புகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

மாவட்டம்

‘லார்கிப்பான்’ குரங்குகள் விவகாரத்தில் திடீர் ‘ட்விஸ்ட்’! – வனத்துறையின் நடவடிக்கைக்கு அதிரடித் தடை

நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ மூலம் பரபரப்பை ஏற்படுத்திய லார்கிப்பான் குரங்குகள் விவகாரத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் உள்ள லார்கிப்பான் குரங்குடன் நடிகர் விக்ரம் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வனத்துறையினரின் விசாரணையில் விக்ரம் வீடியோவில் இருந்த லார்கிப்பான் குரங்கு, ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கேசவநாதனிடமிருந்து பெறப்பட்டது தெரியவந்தது.  இதையடுத்து, பெருந்துறை அருகேயுள்ள கேசவநாதனின் பண்ணையில் வனத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், லார்கிப்பான் குரங்குகள், ஆப்பிரிக்கன் சர்வல் பூனைகள் உள்ளிட்ட அரியவகையைச் சேர்ந்த 11 விலங்குகள் முறையான ஆவணங்களின்றி, வளர்க்கப்பட்டது தெரியவந்தது.  அதனைத்தொடர்ந்து, விலங்குகளை பறிமுதல் செய்து கேசவநாதன் மீது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் உயிருடன் உள்ள விலங்கினங்கள் தொடர்பான விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. இதற்கு அனுமதி கோரி, வனத்துறை சார்பில் பெருந்துறை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு கேசவநாதன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மூர்த்தி, பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், தற்காலிகமாக 11 விலங்குகளையும் கேசவநாதனின் கட்டுப்பாட்டிலேயே வைத்து பராமரிக்ககவும் உத்தரவிட்டார். 

Scroll to Top