ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள கே.என்.பாளையம், செங்கோட்டை நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42), சமையல் தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சமையல் வேலைக்குச் செல்வதாக சொல்லிவிட்டுப் போன செந்தில்குமார், 3 நாட்களாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். குடும்பத்தினர் அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், செங்கோட்டை நகருக்கு அருகேயுள்ள குமரன் நகர் பகுதியில் வாக்கிங் சென்ற சிலர், அங்குள்ள சாக்கடையில் ஆண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து, சத்தியமங்கலம் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையில், அது மாயமான சமையல் தொழிலாளி செந்தில்குமார் என்பது தெரிந்தது. சம்பவம் நடந்த இடம் ஒதுக்குப்புறமான பகுதி என்பதால், இரவு நேரங்களில் குடிமகன்கள் அங்கு மது அருந்துவது வழக்கம். மேலும், அவரின் உடல் அருகே உடைந்த நிலையில் பீர்பாட்டில் கிடந்ததால், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர்.
இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணையில் இறங்கினர். அதன் அடிப்படையில் அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில், சிறுவனும் சம்பவத்தன்று அதே பகுதியில் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளான். பைக்கில் வீட்டுக்கு கிளம்பச் சென்ற சிறுவன், அருகில் மது அருந்திக்கொண்டு இருந்த செந்தில்குமாரிடம், “கொஞ்சம் தள்ளிப்போய் குடி, நான் பைக்கை எடுக்கணும்” என ஒருமையில் பேசியுள்ளான். இதனால் கோபமடைந்த செந்தில்குமார் அந்தச் சிறுவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி, ஆவேசமடைந்த அந்தச் சிறுவன் அருகிலிருந்த பீர்பாட்டிலை எடுத்து செந்தில்குமாரின் தலையில் ஓங்கி அடித்துள்ளான். அதில் அவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட, அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து கொலை செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
பத்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பை தொடராமல், சிறுசிறு கூலி வேலைகளைச் செய்துவந்த சிறுவன், மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்தது சத்தியமங்கலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.