“சாவியைத் தர முடியாது…” – பூட்டை உடைத்து அதிரடி காட்டிய ஆர்.டி.ஓ… ஈங்கூர் கோயிலில் உச்சக்கட்ட பரபரப்பு!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள ஈங்கூரில் மிகவும் பழமை வாய்ந்த தம்பிராட்டி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கொங்கு வேளாளர் சமூகத்தின் ‘ஈஞ்சன்’ குலத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குலதெய்வக் கோயிலாக இது விளங்கி வருகிறது. இக்கோயிலை அப்பகுதியைச் சேர்ந்த ஈஞ்சன் குலப் பெரியவர்கள் நிர்வகித்து வந்தனர். நாளடைவில் இரு கோஷ்டிகளாகப் பிரிந்தனர். இதனால் எழுந்த நிர்வாகச் சிக்கல்களால், கோயிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்க வேண்டும் என சுப்பிரமணி என்பவரது தலைமையிலான தரப்பு கோரிக்கை வைக்க, கோயில் நிர்வாகத்தினை அறநிலையத்துறை எடுத்து கொள்ள முடிவு செய்தது. இதற்கு சாந்தமூர்த்தி என்பவரது தலைமையிலான தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கோயிலைத் தொடர்ந்து நிர்வகித்து வந்தனர். இந்த நிர்வாகப் போட்டியின் தொடர்ச்சியாக, கோயிலின் பொறுப்புக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சாந்தமூர்த்தி தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாந்தமூர்த்தி தரப்பினரின் நிர்வாகம் செல்லத்தக்கது அல்ல என்றும், கோயிலை முன்பு நிர்வகித்து வந்த சுப்பிரமணி தலைமையிலான ‘தம்பிராட்டி அம்மன் அறக்கட்டளை’ கோயிலின் நிர்வாகப் பொறுப்புகளை தொடர்ந்து நடத்தலாம் எனவும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை தக்கார் தனலட்சுமி தலைமையில் சுப்பிரமணி தரப்பினர் இன்று (15.09.2026) கோயிலுக்கு வந்தனர். ஆனால், சாந்தமூர்த்தி தரப்பினர் கோயிலின் சாவிகளைக் கொடுக்க மறுத்து, பூட்டி வைத்துப் பிரச்சனை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தரப்பினர் திரண்டு வந்து ஈங்கூர் ரவுண்டானா அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெருந்துறை – சென்னிமலை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்து வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்து கோயில் வளாகத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே, சாந்தமூர்த்தி தரப்பினர் நிர்வாகத்தை ஒப்படைக்க 3 நாட்கள் கால அவகாசம் வேண்டுமென கேட்டனர். இதுகுறித்து சம்பவ இடத்திலேயே ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமி, பெருந்துறை வட்டாட்சியர் செல்வகுமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார் மற்றும் ஈரோடு டி.எஸ்.பி. முத்துக்குமார் ஆகியோர் இருதரப்பிடமும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உள்ளூர் தரப்பினர் சாவியை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து சலசலப்பில் ஈடுபட்டனர். நிலைமை கைமீறிச் சென்றதால், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமியின் அதிரடி உத்தரவின் பேரில் கோயில் அலுவலகப் பூட்டு உடைக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சுப்பிரமணியம் தரப்பிடம் நிர்வாகப் பொறுப்புகள் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன. சாலை மறியல், போக்குவரத்து ஸ்தம்பிப்பு மற்றும் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் ஈங்கூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

