திண்டுக்கல் அருகே உள்ள இரண்டலப்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லாரன்ஸ் (36). இவருக்கும் கெளசல்யா (32) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 5 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியருக்கு இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த கௌசல்யா திடீரென மாயமானார். குட்டத்துபட்டியில் வசித்துவரும் பெற்றோரிடம் கெளசல்யா தினமும் போனில் பேசுவது வழக்கம். ஆனால், மகளிடம் இருந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் எந்த போனும் வராததால் சந்தேகமடைந்த கௌசல்யாவின் பெற்றோர், மருமகன் லாரன்ஸிடம் விசாரித்துள்ளனர். ஆனால், அவரிடமிருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
அதையடுத்து, ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என பதறிப்போன கெளசல்யாவின் பெற்றோர், தங்களுடைய மகளை கண்டுபிடித்து தருமாறு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார், லாரன்ஸைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரத்தில் அவரைக் கொன்றுவிட்டதாகவும், விஷயம் வெளியே தெரிந்தால் போலீசிடம் மாட்டிக் கொள்வோம் என பயந்து மனைவியின் உடலை மறைக்க திட்டமிட்டதாகவும், பாபநாசம் பட பாணியில் சிறுமலை அடிவாரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரிங் ரோடு பாலத்திற்காக தோண்டப்பட்ட குழியில் மனைவியின் உடலைப் போட்டு மூடியதாகவும் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு போலீசார் அதிர்ந்து போயுள்ளனர்.
இதையடுத்து, திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வினோத் முன்னிலையில் லாரன்ஸ் அடையாளம் காட்டிய இடத்தில், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு உடலைக் கண்டுபிடிக்கும் பணி தொடங்கியது. அந்த இடத்தில் ரிங் ரோடு அமைப்பதற்காக பழைய கிணறுகள் மூடப்பட்டிருந்ததால் உடலைக் கண்டெடுப்பதில் பெரும் சிக்கல் நீடித்தது. 3 நாட்கள் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு, கௌசல்யாவின் சேலை மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட எலும்புகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், லாரன்ஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாபநாசம் பட பாணியில் நடந்துள்ள இந்தச் சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.