November 5, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

சரிந்து விழுந்த ராட்சத கிரேன்… குடும்பத்தின் வறுமையைப் போக்க இஸ்ரேல் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்! 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியைச் சேர்ந்தவர் வீரமணி (31). இவருக்கு புவனேஸ்வரி (25) என்ற மனைவியும், தேஜாஸ்ரீ (4) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். குடும்பச் சூழல் காரணமாக, வீரமணி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல் நாட்டிற்கு கட்டிட வேலைக்குச் சென்றுள்ளார். வீரமணி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊரான மூங்கில்பட்டிக்கு வந்து விட்டு மீண்டும் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றார். இந்நிலையில், கடந்த அக்.27-ம் தேதி பணியில் இருந்தபோது ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி வீரமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தி வீரமணியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வீரமணியின் உடலை விரைவாகத் தமிழகத்திற்கு கொண்டுவரவும், குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் வாழ்வாதாரப் பாதுகாப்பும் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு குடும்பத்தினர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘பாபநாசம்’ பட பாணியில் மனைவியை கொன்று புதைத்த கொடூரன்; 3 நாள் தேடலில் 30 அடி ஆழத்தில் சிக்கிய எலும்புகள்!

திண்டுக்கல் அருகே உள்ள இரண்டலப்பாறை  பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லாரன்ஸ் (36). இவருக்கும் கெளசல்யா (32) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 5 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியருக்கு இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த கௌசல்யா திடீரென மாயமானார். குட்டத்துபட்டியில் வசித்துவரும் பெற்றோரிடம் கெளசல்யா தினமும் போனில் பேசுவது வழக்கம். ஆனால், மகளிடம் இருந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் எந்த போனும் வராததால் சந்தேகமடைந்த கௌசல்யாவின் பெற்றோர், மருமகன் லாரன்ஸிடம் விசாரித்துள்ளனர். ஆனால், அவரிடமிருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை.  அதையடுத்து, ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என பதறிப்போன கெளசல்யாவின் பெற்றோர், தங்களுடைய மகளை கண்டுபிடித்து தருமாறு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார், லாரன்ஸைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறின்போது ஆத்திரத்தில் அவரைக் கொன்றுவிட்டதாகவும், விஷயம் வெளியே தெரிந்தால் போலீசிடம் மாட்டிக் கொள்வோம் என பயந்து மனைவியின் உடலை மறைக்க திட்டமிட்டதாகவும், பாபநாசம் பட பாணியில் சிறுமலை அடிவாரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரிங் ரோடு பாலத்திற்காக தோண்டப்பட்ட குழியில் மனைவியின் உடலைப் போட்டு மூடியதாகவும் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு போலீசார் அதிர்ந்து போயுள்ளனர். இதையடுத்து, திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வினோத் முன்னிலையில் லாரன்ஸ் அடையாளம் காட்டிய இடத்தில், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு உடலைக் கண்டுபிடிக்கும் பணி தொடங்கியது. அந்த இடத்தில் ரிங் ரோடு அமைப்பதற்காக பழைய கிணறுகள் மூடப்பட்டிருந்ததால் உடலைக் கண்டெடுப்பதில் பெரும் சிக்கல் நீடித்தது. 3 நாட்கள் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு, கௌசல்யாவின் சேலை மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட எலும்புகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், லாரன்ஸைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாபநாசம் பட பாணியில் நடந்துள்ள இந்தச் சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

முட்புதரை ‘கஞ்சா குடோன்’ ஆக மாற்றிய வடமாநிலத் தொழிலாளி… போலீசிடம் சிக்கிய பின்னணி! 

வட மாநிலங்களில் இருந்து திருப்பூர் மாநகரப் பகுதிக்கு அதிகளவில் கஞ்சா கடத்தி வரப்பட்டு ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பூர் மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டி பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த வடமாநில வாலிபர் ஒருவரைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்த, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். அதனையடுத்து போலீசார் தங்களது பாணியில் விசாரித்துள்ளனர். விசாரணையில், போலீசில் சிக்கிய நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் நாயக் (23) என்பதும், திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் தங்கி அங்குள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே அவ்வப்போது ஒடிசா சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூரில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. கஞ்சாவை பதுக்கி வைத்துள்ள இடத்தை போலீசார் கேட்டபோது, பிடிபட்ட இடத்திற்கு அருகில் இருந்த முட்புதர் ஒன்றை அடையாளம் காட்டியுள்ளார். அங்கு சோதனை செய்தபோது, முட்புதரையே குடோன் போல மாற்றி, அங்கு பண்டல் பண்டலாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கணேஷ் நாயக்கை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Scroll to Top