“எங்களை மன்னிச்சிடுங்க அம்மா…” – கத்தியைக் காட்டி நகையைப் பறித்துவிட்டு மூதாட்டி காலில் விழுந்த கொள்ளையர்கள்! 

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சுள்ளிபாளையம் பொன்னியன்காடு பகுதியை சேர்ந்த  தம்பதியர் சிவசாமி (61) – பூங்கொடி (58). விவசாயியான இவர்கள் தனது மகள் தமிழ் இலக்கியா (33) மற்றும் பேரன் ஜோகித் பிரணவ் (11) ஆகியோருடன் தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்றிரவு வெளியே சென்றிருந்த தனது மகள் தமிழ் இலக்கியாவை அழைத்து வருவதற்காக, சிவசாமி ஈரோடு நம்பியூர் சென்றுள்ளார். வீட்டில் பூங்கொடி மற்றும் பேரன் ஜோகித் பிரணவ் மட்டுமே இருந்துள்ளனர்.

வீட்டிலிருந்து சிவசாமி புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே, முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் புகுந்த 3 மர்ம நபர்கள், பூங்கொடியின் கழுத்தில் அரிவாளை வைத்து பணம், நகைகளைக் கேட்டு மிரட்டியுள்ளனர். பயந்துபோய் பூங்கொடி சத்தம் போட, அவரையும் அவரது பேரனையும் அந்த மர்மநபர்கள் தாங்கியுள்ளனர். 

அதையடுத்து பூங்கொடியிடம் இருந்த ஐந்தரை சவரன் தாலி செயின் மற்றும் ஒரு பவுன் தங்க தாலி பொட்டு ஆகியவற்றை பறித்த கொள்ளையர்கள், வீட்டின் பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

கொள்ளையடித்துவிட்டுச் செல்லும்போது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய கொள்ளையன், பூங்கொடியின் காலில் விழுந்து ‘எங்களை மன்னிச்சிடுங்க’ எனச் சொல்லிவிட்டு, அங்கிருந்து தப்பித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேயூர் போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் கொண்டு வீட்டில் தடயங்களைச் சேகரித்தனர். மேலும், கொள்ளை நடைபெற்ற வீட்டினருகே 10-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பிற செய்திகள்

Scroll to Top