October 16, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

300 பெண்களின் ஆபாசப் படங்கள்; ஆன்லைனில் விற்று சம்பாதித்த கல்லூரி மாணவன்! – போலீசில் சிக்கிய பின்னணி?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் சரத் (வயது 19). கோவையில் உள்ள கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தன்னுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வந்த மாணவிகள் மற்றும் உறவுப் பெண்களின் புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் இருந்து எடுத்து, அதனை ஆபாசமாக மாஃர்பிங் செய்து வந்துள்ளார்.  சோஷியல் மீடியாவில் போலியான ஐடி ஒன்றை உருவாக்கி, ‘பணம் அனுப்பினால் இளம் பெண்களின் ஆபாசப் படங்கள் அனுப்பப்படும்’ என போஸ்ட் போட்டுள்ளார். சபல புத்தி உள்ள சிலர் இதனைப் பார்த்து, சரத்தை இன்பாக்ஸ் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, ஆபாசப் படங்கள் அடங்கிய டெலிகிராம் லிங்கை அவர்களுக்கு அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், அவிநாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இந்த டெலிகிராம் லிங்க் கிடைத்திருக்கிறது. அவர் அதை திறந்து பார்க்க, தன்னுடைய தங்கை மற்றும் அவளது தோழியின் ஆபாசப் படங்கள் இருந்துள்ளன. அதைப்பார்த்து அதிர்ந்துபோனவர், ஆபாசப் படங்களை ஆன்லைனில் வெளியிட்டது யார் எனத் தேடி வந்துள்ளார். ஒருவழியாக நண்பர்கள் உதவியுடன் சரத்தை தேடிப்பிடித்த அந்த இளைஞர், சரத்தை தனியிடத்திற்கு அழைத்துச்சென்று கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரத், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த போலீசார், உங்களைத் தாக்கியது யார்? எதற்காக தாக்கினார்கள்? என விசாரித்துள்ளனர். அதற்கு சரத் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதற்கிடையே சரத்தை தாக்கிய அந்த இளைஞர் ஆபாசப் பட விவகாரத்தை அவர்களுடைய உறவினர்களிடம் தெரியப்படுத்தி, திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து புகார் கொடுத்துள்ளார். சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்களின் குடும்பத்தார் சரத் மீது போலீஸில் புகார் அளித்தனர். அதையடுத்து மருத்துவமனையில் இருந்த சரத்தை போலீசார் கைது செய்தனர். சரத்தின் செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அதில் 300-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது போலீசாரையே தலைசுற்ற வைத்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாக மார்ஃபிங் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.  இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சரத் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விவகாரம் வெளியே தெரிந்ததுமே ஆபாசப் படங்களின் லிங்குகள் இருந்த டெலிகிராம் குரூப்பை சரத் அழித்துள்ளார். இதனால், அந்த ஆபாசப் படங்கள் யார் யாருக்கெல்லாம் விற்கப்பட்டது? இதன் பின்னணியில் வேறு யாரெல்லாம் உள்ளனர்? சரத் இந்தப் படங்களை வைத்து பெண்களை மிரட்டியுள்ளாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்த விவகாரத்தில் கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“எங்களை மன்னிச்சிடுங்க அம்மா…” – கத்தியைக் காட்டி நகையைப் பறித்துவிட்டு மூதாட்டி காலில் விழுந்த கொள்ளையர்கள்! 

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சுள்ளிபாளையம் பொன்னியன்காடு பகுதியை சேர்ந்த  தம்பதியர் சிவசாமி (61) – பூங்கொடி (58). விவசாயியான இவர்கள் தனது மகள் தமிழ் இலக்கியா (33) மற்றும் பேரன் ஜோகித் பிரணவ் (11) ஆகியோருடன் தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்றிரவு வெளியே சென்றிருந்த தனது மகள் தமிழ் இலக்கியாவை அழைத்து வருவதற்காக, சிவசாமி ஈரோடு நம்பியூர் சென்றுள்ளார். வீட்டில் பூங்கொடி மற்றும் பேரன் ஜோகித் பிரணவ் மட்டுமே இருந்துள்ளனர். வீட்டிலிருந்து சிவசாமி புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே, முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் புகுந்த 3 மர்ம நபர்கள், பூங்கொடியின் கழுத்தில் அரிவாளை வைத்து பணம், நகைகளைக் கேட்டு மிரட்டியுள்ளனர். பயந்துபோய் பூங்கொடி சத்தம் போட, அவரையும் அவரது பேரனையும் அந்த மர்மநபர்கள் தாங்கியுள்ளனர்.  அதையடுத்து பூங்கொடியிடம் இருந்த ஐந்தரை சவரன் தாலி செயின் மற்றும் ஒரு பவுன் தங்க தாலி பொட்டு ஆகியவற்றை பறித்த கொள்ளையர்கள், வீட்டின் பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளையடித்துவிட்டுச் செல்லும்போது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய கொள்ளையன், பூங்கொடியின் காலில் விழுந்து ‘எங்களை மன்னிச்சிடுங்க’ எனச் சொல்லிவிட்டு, அங்கிருந்து தப்பித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேயூர் போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் கொண்டு வீட்டில் தடயங்களைச் சேகரித்தனர். மேலும், கொள்ளை நடைபெற்ற வீட்டினருகே 10-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Scroll to Top