பொதுவாகக் காணாமல் போன மனிதர்களையோ அல்லது தொலைந்து போன உடைமைகளையோ கண்டுபிடித்துத் தருபவர்களுக்குப் பரிசுத் தொகை அறிவிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், அரசுப் பதிவேடுகளிலேயே இருக்கும் 5 அரசுப் பள்ளிகளைக் கண்டுபிடித்துத் தருபவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்திருப்பது இந்திய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச அரசு மீது இந்த வினோதமான குற்றச்சாட்டையும் சவாலையும் முன்வைத்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்.
“உ.பி அரசின் அதிகாரப்பூர்வ பட்டியலின்படி ஜோன்பூர் மாவட்டத்தில் உள்ள,
- தல்கர் டோலா தொடக்கப் பள்ளி
- மிசிர்பூர் பெண்கள் தொடக்கப் பள்ளி
- கடான் அர்சானி கூட்டுப் பள்ளி
- உருது பஜார் தொடக்கப் பள்ளி
- பாக் ஹாஷிம் தொடக்கப் பள்ளி
ஆகிய 5 பள்ளிகளில் ஒன்றையாவது கண்டுபிடித்துக் காட்டுங்கள்; என் சம்பளத்தில் இருந்து ரூ.1 லட்சம் பரிசாகத் தருகிறேன்” என சஞ்சய் சிங் அறிவித்துள்ளார்.
இந்த பள்ளிகள் அனைத்தும் UDISE Plus எனப்படும் கல்வி தொடர்பான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பில், செயல்பட்டுக் கொண்டிருப்பதாக காட்டப்படுவதாகவும், நிஜத்தில் அந்தந்த முகவரிகளில் அமைந்திருக்கவே இல்லை என்றும், அவை காகிதத்தில் மட்டுமே இயங்கி வருகின்றன என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பள்ளிகள் உண்மையில் இல்லாத நிலையில் அவை எவ்வாறு தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாகப் பதிவாகியுள்ளன? எனவும், பள்ளிகள் இல்லாத நிலையில் மாணவர்களுக்கான கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பெயரில் பெருந்தொகை நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் சிங் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
– தி வெஸ்ட் செய்திப் பிரிவு
*****
📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்!
👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17