August 25, 2026

இந்தியா

காணாமல் போன 5 அரசுப் பள்ளிகள்! கண்டுபிடிச்சா ரூ.1 லட்சம் ரொக்கம்! – எம்பி கொடுத்த அதிரடி ஆஃபர்!

பொதுவாகக் காணாமல் போன மனிதர்களையோ அல்லது தொலைந்து போன உடைமைகளையோ கண்டுபிடித்துத் தருபவர்களுக்குப் பரிசுத் தொகை அறிவிப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், அரசுப் பதிவேடுகளிலேயே இருக்கும் 5 அரசுப் பள்ளிகளைக் கண்டுபிடித்துத் தருபவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்திருப்பது இந்திய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச அரசு மீது இந்த வினோதமான குற்றச்சாட்டையும் சவாலையும் முன்வைத்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங். “உ.பி அரசின் அதிகாரப்பூர்வ பட்டியலின்படி ஜோன்பூர் மாவட்டத்தில் உள்ள, இந்த பள்ளிகள் அனைத்தும் UDISE Plus எனப்படும் கல்வி தொடர்பான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பில், செயல்பட்டுக் கொண்டிருப்பதாக காட்டப்படுவதாகவும், நிஜத்தில் அந்தந்த முகவரிகளில் அமைந்திருக்கவே இல்லை என்றும், அவை காகிதத்தில் மட்டுமே இயங்கி வருகின்றன என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பள்ளிகள் உண்மையில் இல்லாத நிலையில் அவை எவ்வாறு தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாகப் பதிவாகியுள்ளன? எனவும், பள்ளிகள் இல்லாத நிலையில் மாணவர்களுக்கான கட்டமைப்பு மற்றும் பராமரிப்புப் பெயரில் பெருந்தொகை நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் சிங் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. – தி வெஸ்ட் செய்திப் பிரிவு ***** 📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

தமிழ்நாடு

எமனாக வந்த ‘பலூன்’; 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17 ***** திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்துள்ள பச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் – சத்யா தம்பதியர். துணி வியாபாரம் செய்து வரும் இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டு குழந்தைகள் இரட்டையர்கள். வழக்கம்போல பெற்றோர் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களது 6 வயது மகன் சோமநாத், மூச்சுப் பேச்சின்றி மயங்கிய நிலையில் வீட்டில் கீழே விழுந்து கிடந்துள்ளான். இதனைப் பார்த்து பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர், உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர்.  அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அப்போதுதான், பலூனை ஊத முயன்றபோது அல்லது விளையாடியபோது எதிர்பாராதவிதமாக பலூன் சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டதும், அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் சோமநாத் உயிரிழந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனின் தொண்டைக் குழியில் சிக்கியிருந்த பலூனை மருத்துவர்கள் அகற்றி வெளியே எடுத்தனர். இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பலூன் போன்ற சாதாரண விளையாட்டுப் பொருள்கூட சிறு குழந்தைகளுக்கு எதிர்பாராத வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. குறிப்பாக பலூனை ஊதுவது அல்லது அதன் உடைந்த துண்டுகளை வைத்து விளையாடுவது போன்ற நேரங்களில் பெற்றோர் குழந்தைகளை கவனமாக கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. – தி வெஸ்ட் செய்திப் பிரிவு ***** 📢 செய்திகளை நேரடியாக உங்கள் வாட்ஸ்அப்பில் பெற, ‘தி வெஸ்ட்’ வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்! 👉 இணைய: 🔗 https://whatsapp.com/channel/0029Vb8dxoT5a23v4WK1FC17

Scroll to Top