“என்னதான் விளம்பரம் செய்தாலும்…” திருப்பூர் ரசிகர்களிடம் ரியோ ராஜ் வைத்த கோரிக்கை!

இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில், ரியோ ராஜ், வர்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் இந்த வாரம் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ராம் இன் லீலா’. இப்படம் திரையிடப்பட்டு வரும் திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு படக்குழுவினர் திடீரென வருகை தந்தனர்.

இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன், நடிகர் ரியோ ராஜ், நடிகை வர்த்திகா உள்ளிட்ட படக்குழுவினர் திரையரங்கிற்குள் நுழைந்ததும், அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர்களை வரவேற்றனர்.

அப்போது ரசிகர்களிடம் பேசிய படக்குழுவினர், “படத்திற்கு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்து வருகிறோம். அதன்படி திருப்பூருக்கும் வந்துள்ளோம்” என்றனர்.

நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், “திரையரங்குகளில் எங்கள் படத்தை மக்கள் ரசித்துப் பார்ப்பதும், படம் மக்களுக்கு பிடித்திருப்பதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. படம் உங்களுக்கு பிடித்திருந்தால், அதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமும் எடுத்துச் சொல்லுங்கள். என்னதான் விளம்பரம் செய்தாலும், மக்களின் வாய்மொழி விமர்சனம்தான் ஒரு படத்தை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். இந்தச் சின்னப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம்” என்றார்.

பிற செய்திகள்

Scroll to Top