“கொட்டியதை அள்ளாம ஒரு வண்டியும் நகராது!” – சிறைபிடிக்கப்பட்ட 50 லாரிகள்; அரண்டுப்போன திருப்பூர் மாநகராட்சி
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் நாள்தோறும் சுமார் 700 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை பல்வேறு பகுதிகளில் சாலையோரமாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது சேகரிக்கப்படும் குப்பைகளை ஊத்துக்குளி அருகே உள்ள ஏ.பெரியபாளையம் பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் பாறைக்குழியில் கொட்டி வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் குப்பைகள் கொண்டு வரப்பட்டு பாறைக்குழியில் கொட்டியுள்ளனர். தங்கள் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொடிய தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆத்திரமடைந்த ஏ. பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஒன்றுகூடி குப்பைகளை ஏற்றி வந்த லாரிகளை அதிரடியாகச் சிறைபிடித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஏற்கனவே பாறைக்குழியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை முழுமையாக அகற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது. சில மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் பொதுமக்கள் பல்வேறு நிபந்தனைகளுடன் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். திருப்பூர் மாநகராட்சியின் இந்த செயல்பாட்டிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், பாறைக்குழியில் ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படுமா, இனி அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



