திருப்பூர் கோவில் வழி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (30), அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது மனைவியுடன் புத்தாடைகள் வாங்குவதற்காக திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
பேருந்துகள் உள்ளே நுழையும் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மனைவியுடன் துணிக்கடைக்கு சென்றுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்து பார்த்தபோது, அவர் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மாயமாகியிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அருணாசலம், உடனடியாக அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, இளைஞர் ஒருவர் அப்பகுதியில் நோட்டமிட்டு, அருணாசலத்தின் இருசக்கர வாகனத்தை கேஷூவலாக அங்கிருந்து எடுத்துக்கொண்டு தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதனைத்தொடர்ந்து, பைக்கின் உரிமையாளர் அருணாசலம் கொடுத்த புகாரின்பேரில், திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வாகனத்தை திருடிச் சென்ற நபரை அடையாளம் கண்டு பிடிக்கவும், திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை மீட்கும் முயற்சியிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொது இடங்களில் வண்டியை நிறுத்திட்டுப் போறீங்களா? ‘கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே… இல்லன்னா உங்க வண்டிக்கும் இதே நிலைமைதான்!