ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலீபன் (35). பெருந்துறையைச் சேர்ந்த அருணா (31) என்பவரைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திலீபன் கோபியில் உள்ள ‘கிளாசிக் பைனான்ஸ்’ நிதி நிறுவனத்தில் கலெக்ஷன் பிரிவில் பணியாற்றி வர, அருணா கோபியில் உள்ள ‘சி.கே.கே மெட்ரிகுலேசன்’ பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.
திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால், தம்பதியர் இருவரும் இதற்கான மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே, திலீபனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததோடு, குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குழந்தைப்பேறுக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், மது அருந்த வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படும் நிலையிலும், திலீபன் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று (அக்.20) இரவு 10 மணிக்கு மேல் திலீபன் வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சூழலில் இப்படித் தொடர்ந்து குடிப்பது சரியா? என அருணா கேட்க, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதன்பின்னர், திலீபன் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று தூங்கியுள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த அருணா, வீட்டிலுள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நள்ளிரவு சுமார் 3 மணியளவில் போதை தெளிந்து கீழே இறங்கி வந்து பார்த்த திலீபன், அருணா தூக்கில் தொங்கியபடி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருணாவை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு அருணாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, அருணாவின் தாய் ஜாய் மேரி மருத்துவமனை முன்பு கதறி அழுததுடன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “எனக்கு கணவர் இல்லை. 3 மகள் மட்டுமே உள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு 10 பவுன் நகை போட்டு, என் மகளை திலீபனுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனாலும், திலீபன் குடித்துவிட்டு என் மகளிடம் பணம், நகையை வரதட்சனையாக வாங்கி வரும்படி கேட்டுத் தொல்லை கொடுத்து வந்தார். குழந்தை இல்லை என்றும் தொடர்ந்து கொடுமைப்படுத்தினார். இப்படியான நிலையில், என் மகள் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார். என்னுடைய மகள் அருணாவின் சாவில் சந்தேகம் இருக்கிறது. என்னுடைய மகளை அடித்துக் கொன்றுவிட்டார்கள், அவளுடைய சாவுக்கு நீதி வேண்டும்” எனக் கூறி உறவினர்களுடன் மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருணாவைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவன் திலீபனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். திருமணமான நான்கே ஆண்டுகளில் அருணா உயிரிழந்திருப்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாக கோபி வருவாய்க் கோட்டாட்சியர் சிந்துஜா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.