சேலம் நெய்க்காரப்பட்டி கோடி காடு பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கரின் மகன் தமிழ் (15), அமானி கொண்டலாம்பட்டி காட்டூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கின் மகன் ரிஷபன் (16). இருவரும் கொண்டலாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
மதிய உணவு இடைவேளையின் போது இருவரும் பள்ளிக்கு வெளியே சென்றுள்ளனர். அப்போது, பள்ளிக்கு அருகிலுள்ள சந்தைப்பேட்டை பாலமுருகன் கோயில் அருகே பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட சிறிய பண்டல் ஒன்று கிடந்துள்ளது.
என்னவென்று பிரித்துப் பார்த்தபோது அதற்குள் கட்டுக் கட்டாகப் பணம் இருந்ததைப் பார்த்து திகைத்துப் போயுள்ளனர். உடனே அந்தப் பணத்தை அப்படியே எடுத்துச் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியர் துரைசாமியிடம் மாணவர்கள் இருவரும் ஒப்படைத்தனர். இதைக் கண்டு வியந்துபோன தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியருடன் அந்த மாணவர்களை அழைத்துக்கொண்டு உடனடியாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கு எஸ்.ஐ பாலகிருஷ்ணனிடம் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது.
போலீசார் அந்த பண்டலைப் பிரித்து எண்ணியபோது அதில் ரூ.35 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. மாணவன் தமிழின் தந்தை எலக்ட்ரீஷியன் ஆக உள்ளார். இன்னொரு மாணவரான ரிஷபனின் தந்தை பனியன் கம்பெனியில் செய்கிறார். இருவரும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும், துளியும் பேராசைப்படாமல் பணத்தை ஒப்படைத்த அந்த மாணவர்களின் நேர்மையைக் கண்டு மெச்சிய எஸ்.ஐ பாலகிருஷ்ணன், மாணவர்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
ரூ.35 ஆயிரம்… யாருடைய பணம்?
கொண்டலாம்பட்டி அரசுப் பள்ளி அருகே சக்திவேல் என்பவர் மளிகை கடை வைத்து, பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று நெத்திமேடு பகுதியில் உள்ள பொறிக்கடையில் இருந்து பொறி லோடு ஏற்றிக்கொண்டு, தாதகாப்பட்டியில் உள்ள கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு பொறியை கொடுத்துவிட்டு, அதற்கான ரூ.35 ஆயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சாப்பிட வந்துள்ளார்.
பிளாஸ்டிக் கவரில் சுற்றி பாக்கெட்டில் வைத்த அந்தப் பணம், ஆட்டோவில் வரும்போது வழுக்கிக் கீழே விழுந்துள்ளது. வீட்டில் வந்து பார்த்தபோது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், சாலையில் கிடந்த பணம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் இருப்பதாகத் தகவல் கிடைக்கவே, அங்கு ஓடிச் சென்ற சக்திவேல், பணத்திற்கான சரியான விவரங்களைக் கூறி தனது பணத்தைப் பெற்றுக்கொண்டார்.
3 thoughts on “சாலையில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்; நேர்மையால் நெகிழ வைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்!”
I Appreciate the students action
Yes good
Good hearted Students