ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மாது (எ) மகாதேவா (19) என்பவரை தாளவாடி காவல் நிலைய ஓய்வு அறையில் போலீசார் கட்டி வைத்து தாக்கும் வீடியோ கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் செப்டம்பர் 9ஆம் தேதி அறிக்கை ஒன்று வெளியானது. அதில், இந்தச் சம்பவம் 2024 செப்டம்பரில் நடைபெற்றது எனவும் தற்போது நடைபெறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் இந்த வீடியோ செய்தி மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானதால் இளைஞரைத் தாக்கிய தாளவாடி எஸ்.ஐ மார்ட்டின் லூதர் மற்றும் ஏட்டு தனபால் அகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி, ஈரோடு எஸ்.பி கிரண் ஸ்ருதி உத்தரவிட்டதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் 26 எஸ்.ஐகளை பணியிட மாறுதல் செய்து எஸ்.பி கிரண் ஸ்ருதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்தப் பட்டியலில் வரிசை எண் 22-ல் எஸ்.ஐ மார்ட்டின் லூதர் தாளவாடி காவல் நிலையத்திலிருந்து புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் ஈரோடு மாவட்ட காவல்துறையின் மீது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை காரணமாக எஸ்.ஐ மார்ட்டின் லூதர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாக வெளியான செய்தி உண்மை என்றால், தற்போதைய பணியிட மாற்ற அறிவிப்பில் ஆயுதப்படையில் இருந்து புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தாளவாடி காவல் நிலையத்தில் இருந்து புளியம்பட்டிக்கு மாற்றப்படுவதாக எப்படி அறிவிப்பு வெளியானது?
கைதியைத் தாக்கிய சர்ச்சையில் சிக்கிய எஸ்.ஐ மார்ட்டின் லூதர் உண்மையிலேயே ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாரா? அல்லது தாளவாடியிலேயே தொடர்ந்து பணியாற்றினாரா? என சந்தேகம் எழுகிறது.
எஸ்.ஐ மார்ட்டின் லூதர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார் என அனைத்து முன்னணி ஊடகங்களிலும் செய்து வெளியானது. அந்தச் செய்தி தவறானது என்றால், செய்தி வெளியான போதே ஈரோடு மாவட்ட காவல்துறை அதை மறுத்து ஏன் அறிக்கை வெளியிடவில்லை?
இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில் கண் துடைப்பிற்காக, எஸ்.ஐ மார்ட்டின் லூதர் ஆயுதப்படைக்கு மாற்றம் என பொய்யான அறிவிப்பு வெளியிடப்பட்டதா? இல்லை அவர் உண்மையிலேயே ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருந்தார் என்றால் அதுதொடர்பான உத்தரவு நகலை வெளியிட மாவட்ட காவல்துறை தயாராக உள்ளதா?
செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி கைதியைத் தாக்கிய விவகாரத்தில் எஸ்.ஐ மார்ட்டின் லூதர் மீது துறை ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல், ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதே மிகமிக குறைந்தபட்ச நடவடிக்கை தான். ஆனால், அந்த இடமாற்ற நடவடிக்கையே வெறும் கண் துடைப்பு நாடகம் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
எனவே, எஸ்.ஐ மார்ட்டின் லூதர் பணியிட மாறுதல் சர்ச்சையில் நடந்தது என்ன? என்பதை ஈரோடு மாவட்ட எஸ்.பி கிரண் ஸ்ருதி தெளிவுபடுத்த வேண்டும்!
1 thought on “TW EXCLUSIVE: எஸ்.ஐ டிரான்ஸ்பரில் வெளிவந்த உண்மை… ஈரோடு மாவட்ட காவல்துறையின் நாடகம் அம்பலம்?”
அட முட்டாள் ஊடகமே எல்லாம் நீங்க தான்டா போடுறீங்க. நீங்க ஒழுங்கா தீர விசாரித்து செய்தி போடுங்கடா முதலில்