November 12, 2026

TW Exclusive, தலைப்புச் செய்திகள்

TW EXCLUSIVE: எஸ்.ஐ டிரான்ஸ்பரில் வெளிவந்த உண்மை… ஈரோடு மாவட்ட காவல்துறையின் நாடகம் அம்பலம்?

ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மாது (எ) மகாதேவா (19) என்பவரை தாளவாடி காவல் நிலைய ஓய்வு அறையில் போலீசார் கட்டி வைத்து தாக்கும் வீடியோ கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் செப்டம்பர் 9ஆம் தேதி அறிக்கை ஒன்று வெளியானது. அதில், இந்தச் சம்பவம் 2024 செப்டம்பரில் நடைபெற்றது எனவும் தற்போது நடைபெறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் இந்த வீடியோ செய்தி மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானதால் இளைஞரைத் தாக்கிய தாளவாடி எஸ்.ஐ மார்ட்டின் லூதர் மற்றும் ஏட்டு தனபால் அகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி, ஈரோடு எஸ்.பி கிரண் ஸ்ருதி உத்தரவிட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் 26 எஸ்.ஐகளை பணியிட மாறுதல் செய்து எஸ்.பி கிரண் ஸ்ருதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்தப் பட்டியலில் வரிசை எண் 22-ல் எஸ்.ஐ மார்ட்டின் லூதர் தாளவாடி காவல் நிலையத்திலிருந்து புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் ஈரோடு மாவட்ட காவல்துறையின் மீது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக எஸ்.ஐ மார்ட்டின் லூதர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாக வெளியான செய்தி உண்மை என்றால், தற்போதைய பணியிட மாற்ற அறிவிப்பில் ஆயுதப்படையில் இருந்து புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தாளவாடி காவல் நிலையத்தில் இருந்து புளியம்பட்டிக்கு மாற்றப்படுவதாக எப்படி அறிவிப்பு வெளியானது? கைதியைத் தாக்கிய சர்ச்சையில் சிக்கிய எஸ்.ஐ மார்ட்டின் லூதர் உண்மையிலேயே ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாரா? அல்லது தாளவாடியிலேயே தொடர்ந்து பணியாற்றினாரா? என சந்தேகம் எழுகிறது. எஸ்.ஐ மார்ட்டின் லூதர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார் என அனைத்து முன்னணி ஊடகங்களிலும் செய்து வெளியானது. அந்தச் செய்தி தவறானது என்றால், செய்தி வெளியான போதே ஈரோடு மாவட்ட காவல்துறை அதை மறுத்து ஏன் அறிக்கை வெளியிடவில்லை? இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில் கண் துடைப்பிற்காக, எஸ்.ஐ மார்ட்டின் லூதர் ஆயுதப்படைக்கு மாற்றம் என பொய்யான அறிவிப்பு வெளியிடப்பட்டதா? இல்லை அவர் உண்மையிலேயே ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருந்தார் என்றால் அதுதொடர்பான உத்தரவு நகலை வெளியிட மாவட்ட காவல்துறை தயாராக உள்ளதா?  செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி கைதியைத் தாக்கிய விவகாரத்தில் எஸ்.ஐ மார்ட்டின் லூதர் மீது துறை ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல், ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதே மிகமிக குறைந்தபட்ச நடவடிக்கை தான். ஆனால், அந்த இடமாற்ற நடவடிக்கையே வெறும் கண் துடைப்பு நாடகம் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே, எஸ்.ஐ மார்ட்டின் லூதர் பணியிட மாறுதல் சர்ச்சையில் நடந்தது என்ன? என்பதை ஈரோடு மாவட்ட எஸ்.பி கிரண் ஸ்ருதி தெளிவுபடுத்த வேண்டும்!

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

குடும்பத்தினருக்கு தெரியாமல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட கர்ப்பிணி… பிரசவத்தின்போது நடந்த விபரீதம்!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வள்ளிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (36). இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், பிரியங்கா (30) என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், தம்பதிக்கு குழந்தை இல்லை.  இதையடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ‘கவின் கருத்தரித்தல் மருத்துவமனையில்’ சிகிச்சை பெற்று, செயற்கை கருத்தரித்தல் முறையில் பிரியங்கா கருவுற்றிருந்தார்.  இந்நிலையில், கடந்த நவம்பர் 7-ம் தேதி பிரியங்காவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே, குடும்பத்தினர் அவரை கவின் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கவின் மருத்துவமனை மருத்துவர் மாலினி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பிரியங்காவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல், அவசர அவசரமாய் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர் மாலினியே முன்னின்று பிரியங்காவிற்கு பிரசவம் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. சிசேரியன் முறையில் நடைபெற்ற இந்த பிரசவத்தின் போது பிரியாங்காவின் வயிற்றில் இருந்த இரட்டைக் குழந்தைகளில், ஒரு குழந்தை பரிதாபமாக இறந்து பிறந்துள்ளது.  இதற்கிடையே, தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த பிரியங்காவின் குடும்பத்தினருக்கு, தாய் மற்றும் குழந்தையைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பிரியங்காவின் குடும்பத்தினர், எங்களுக்குத் தெரியாமல் எதற்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தீர்கள்? மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் பிரசவத்தின் போது ஒரு குழந்தை இறந்துவிட்டது எனக் கூறி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பிறகு உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். தற்போது பிரியங்காவும் மற்றொரு குழந்தையும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

எலுமிச்சை பழத்தால் நடந்த விபரீதம்… ஒர்க்‌ஷாப் உரிமையாளரை துரத்தி துரத்தி வெட்டிய இளநீர்க் கடைக்காரர்! 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் வினோத் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக டூவீலர் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையின் அருகே திருநெல்வேலியைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் இளநீர்க் கடை வைத்துள்ளார். வினோத் தனது கடையில் சாமி படத்திற்கு வைத்திருந்த எலுமிச்சை பழம் மற்றும் பூக்களை எடுத்து வெளியே வீசியபோது, அந்த எலுமிச்சை பழம் உருண்டு சென்று இளநீர்க் கடை முன்னால் விழுந்துள்ளது.  இதைப் பார்த்து ஆத்திரமடைந்த வெள்ளத்துரை, “என் கடைக்கு செய்வினை வெச்சு எலுமிச்சை பழத்தை போடுறீயா?” எனக் கேட்டு வினோத்திடம் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த வெள்ளத்துரை கடையில் இளநீர் வெட்ட வைத்திருந்த அரிவாளால் வினோத்தை துரத்தி துரத்தி வெட்டியுள்ளார்.  வினோத்தின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் வெள்ளத்துரையிடம் இருந்து வினோத்தை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூரத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Scroll to Top