குடும்பத்தினருக்கு தெரியாமல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட கர்ப்பிணி… பிரசவத்தின்போது நடந்த விபரீதம்!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள வள்ளிபட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (36). இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், பிரியங்கா (30) என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், தம்பதிக்கு குழந்தை இல்லை. 

இதையடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ‘கவின் கருத்தரித்தல் மருத்துவமனையில்’ சிகிச்சை பெற்று, செயற்கை கருத்தரித்தல் முறையில் பிரியங்கா கருவுற்றிருந்தார். 

இந்நிலையில், கடந்த நவம்பர் 7-ம் தேதி பிரியங்காவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே, குடும்பத்தினர் அவரை கவின் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கவின் மருத்துவமனை மருத்துவர் மாலினி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பிரியங்காவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல், அவசர அவசரமாய் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர் மாலினியே முன்னின்று பிரியங்காவிற்கு பிரசவம் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.

சிசேரியன் முறையில் நடைபெற்ற இந்த பிரசவத்தின் போது பிரியாங்காவின் வயிற்றில் இருந்த இரட்டைக் குழந்தைகளில், ஒரு குழந்தை பரிதாபமாக இறந்து பிறந்துள்ளது. 

இதற்கிடையே, தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த பிரியங்காவின் குடும்பத்தினருக்கு, தாய் மற்றும் குழந்தையைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பிரியங்காவின் குடும்பத்தினர், எங்களுக்குத் தெரியாமல் எதற்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தீர்கள்? மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் பிரசவத்தின் போது ஒரு குழந்தை இறந்துவிட்டது எனக் கூறி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பிறகு உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தற்போது பிரியங்காவும் மற்றொரு குழந்தையும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top