எலுமிச்சை பழத்தால் நடந்த விபரீதம்… ஒர்க்‌ஷாப் உரிமையாளரை துரத்தி துரத்தி வெட்டிய இளநீர்க் கடைக்காரர்! 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் வினோத் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக டூவீலர் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையின் அருகே திருநெல்வேலியைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் இளநீர்க் கடை வைத்துள்ளார்.

வினோத் தனது கடையில் சாமி படத்திற்கு வைத்திருந்த எலுமிச்சை பழம் மற்றும் பூக்களை எடுத்து வெளியே வீசியபோது, அந்த எலுமிச்சை பழம் உருண்டு சென்று இளநீர்க் கடை முன்னால் விழுந்துள்ளது. 

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த வெள்ளத்துரை, “என் கடைக்கு செய்வினை வெச்சு எலுமிச்சை பழத்தை போடுறீயா?” எனக் கேட்டு வினோத்திடம் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த வெள்ளத்துரை கடையில் இளநீர் வெட்ட வைத்திருந்த அரிவாளால் வினோத்தை துரத்தி துரத்தி வெட்டியுள்ளார். 

வினோத்தின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் வெள்ளத்துரையிடம் இருந்து வினோத்தை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொடூரத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top