45 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை; தாய், தங்கை என குடும்பத்தோடு சிக்கிய கொள்ளையன்!

திருப்பூர் கல்லூரி சாலை மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் அருண்ராஜ் (45). தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூரில் மளிகைக் கடை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். 

இந்நிலையில், கடந்த அக்.18-ம் தேதி, தசரா பண்டிகைக்காக குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்றவர், அக்.23-ம் தேதி வீடு திரும்பியபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.

திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நகை மற்றும் பணம் கொள்ளை போன அருண்ராஜ் வீட்டின் அருகே குடும்பத்துடன் வசித்து வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அருண்ராஜ் சொந்த ஊருக்குச் சென்ற தகவல் அறிந்த விஜய், தனது நண்பர்களான தென்காசியை சேர்ந்த அப்துல் ரசாக் மற்றும் மவுலானா யூசுப் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட 45 பவுன் நகைகளை விஜய் தன்னுடைய தாயார் அமராவதி, தங்கை சரண்யா மற்றும் அவரது கணவர் ஆனந்த் உதவியுடன் கடைகளில் விற்பனை செய்துள்ளார். 

இதையடுத்து, விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர், அப்துல் ரசாக் ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 13 பவுன் நகைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியான மவுலானா யூசுப் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாகவும், மீதமுள்ள நகைகளும், பணமும் அவரிடம் இருப்பதாகவும் அதனை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top