October 30, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘தண்ணீருக்காகத் திரண்ட 2,000 பொதுமக்கள்!’ – மாபெரும் பேரணி & கவன ஈர்ப்பு கருத்தரங்கம்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் மக்கள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கவன ஈர்ப்பு கருத்தரங்கம் அக்டோபர் 28-ல் குன்னத்தூரில் நடைபெற்றது. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் பெருந்துறை முதல், ஆறாவது நீரேற்று நிலையம் வழியாக காரமடை வரை விடுபட்டுள்ள அனைத்து குளம், குட்டைகளை ஆய்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து திட்டப்பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டும். நிறைவேற்றப்பட்ட திட்டத்தில் உள்ள குறைகளை உடனடியாக சரிசெய்திட வேண்டும். பாண்டியாறு பவானி ஆறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதோடு, பசுமை நீர் வலைப்பின்னல் திட்டம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் இந்த மாபெரும் விழிப்புணர்வு மக்கள் பேரணி மற்றும் கவன ஈர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. காலை சுமார் 9 மணியளவில், குன்னத்தூர் பொங்காளியம்மன் திருக்கோயில் திடலில் அத்திக்கடவு – அவினாசி திட்டக் கூட்டமைப்பின் பெயர்ப்பலகை திறப்பு விழா நடைபெற்றது. பின்னர், அங்கிருந்து ஊத்துக்குளி சாலையில் அமைந்துள்ள கொங்கு மஹால் வரை 2 கி.மீ தூரத்திற்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்ட மாபெரும் மக்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கொங்கு மஹாலில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. குன்னத்தூர் மஞ்சள் மண்டி தம்பி (எ) மாரிமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அறத்தமிழன் பேரியக்கத்தின் தலைவர் விஜய் சீத்தாராமன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பெரியசாமி, கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் நல்லசாமி ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர். அத்திக்கடவு – அவிநாசி திட்டக் கூட்டமைப்பைச் சேர்ந்த பெருந்துறை மு.முருகபூபதி, துடுப்பதி டி.கே.பெரியசாமி, தொரவலூர் சம்பத், வைகை துரை, அத்திக்கடவு சுப்பு, வெள்ளியங்கிரி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள். அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது, எவர்சில்வர் டம்ளரில் தண்ணீர் கொடுத்தது தொடங்கி, பேரணியில் பங்கேற்று களைப்பாக கூட்ட அரங்கிற்கு வந்தவர்களுக்கு கம்மங்கூழ் வழங்கியது என சின்னச் சின்ன விஷயங்களில் கூட, உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் மீதான அக்கறையை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் காட்டினர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பேரணி எவ்வித சலசலப்பும் இல்லாமல், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பேரணி நேர்த்தியாக நடைபெற்றது. குன்னத்தூர் பகுதி அத்திக்கடவு திட்ட தன்னார்வலர்கள்சுற்றுச்சூழல் காக்கவும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியதும் மக்கள் மனதில் பெறும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் நீர் ஆதாரங்களைப் பெருக்கவும், விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளை நிறைவேற்றவும், நதிநீர் இணைப்புத் திட்டங்களை முன்னெடுக்கவும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தது உட்பட 7 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

45 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை; தாய், தங்கை என குடும்பத்தோடு சிக்கிய கொள்ளையன்!

திருப்பூர் கல்லூரி சாலை மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் அருண்ராஜ் (45). தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூரில் மளிகைக் கடை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார்.  இந்நிலையில், கடந்த அக்.18-ம் தேதி, தசரா பண்டிகைக்காக குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்றவர், அக்.23-ம் தேதி வீடு திரும்பியபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, நகை மற்றும் பணம் கொள்ளை போன அருண்ராஜ் வீட்டின் அருகே குடும்பத்துடன் வசித்து வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அருண்ராஜ் சொந்த ஊருக்குச் சென்ற தகவல் அறிந்த விஜய், தனது நண்பர்களான தென்காசியை சேர்ந்த அப்துல் ரசாக் மற்றும் மவுலானா யூசுப் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட 45 பவுன் நகைகளை விஜய் தன்னுடைய தாயார் அமராவதி, தங்கை சரண்யா மற்றும் அவரது கணவர் ஆனந்த் உதவியுடன் கடைகளில் விற்பனை செய்துள்ளார்.  இதையடுத்து, விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர், அப்துல் ரசாக் ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 13 பவுன் நகைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளியான மவுலானா யூசுப் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாகவும், மீதமுள்ள நகைகளும், பணமும் அவரிடம் இருப்பதாகவும் அதனை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top