கோயில் நகைகளைத் திருடி… கள்ளக்காதலனுடன் உல்லாசம்! – போலீசில் சிக்கிய கேடி ‘லேடி’ 

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ளது இடும்பன் கோயில். இங்கு கடந்த மே மாதம் செயல் அலுவலராகப் பொறுப்பேற்ற நரசிம்மன், கோயிலின் இருப்புகளை சரிபார்த்தபோது, சுமார் 15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதியிடம் தகவல் தெரிவித்த நரசிம்மன், பழனி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, பழனி டவுன் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

கோயிலின் பூட்டு, பீரோ என எதுவும் உடைபடாமல் நகைகள் கொள்ளை போனதால், கோயில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் யாரேனும் நகைகளைத் திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.

அதில் கோயில் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வந்த, பழனி பாப்பம்பட்டியைச் சேர்ந்த நிரஞ்சனா (26), கோயில் நகைகளைத் திருடியது தெரியவந்தது. 

போலீசார் அவரைக் கைது செய்து விசாரித்ததில், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிரஞ்சனா, நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான பிரபாகரன் (34) என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்து வந்ததும்,

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ்வதற்காக, கோயில் அலுவலகத்தில் இருந்து 164 கிராம் தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளிப் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி பிரபாகரனிடம் கொடுத்துள்ளார். இருவரும் அதை உருக்கி விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தை வைத்து பல வகைகளிலும் உல்லாசமாக செலவழித்தது தெரியவந்தது. 

அதையடுத்து நிரஞ்சனா மற்றும் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து உருக்கி வைக்கப்பட்டிருந்த 164 கிராம் தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்த விவகாரத்தில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

Scroll to Top