திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் சரத் (வயது 19). கோவையில் உள்ள கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தன்னுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வந்த மாணவிகள் மற்றும் உறவுப் பெண்களின் புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் இருந்து எடுத்து, அதனை ஆபாசமாக மாஃர்பிங் செய்து வந்துள்ளார்.
சோஷியல் மீடியாவில் போலியான ஐடி ஒன்றை உருவாக்கி, ‘பணம் அனுப்பினால் இளம் பெண்களின் ஆபாசப் படங்கள் அனுப்பப்படும்’ என போஸ்ட் போட்டுள்ளார். சபல புத்தி உள்ள சிலர் இதனைப் பார்த்து, சரத்தை இன்பாக்ஸ் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, ஆபாசப் படங்கள் அடங்கிய டெலிகிராம் லிங்கை அவர்களுக்கு அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில், அவிநாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இந்த டெலிகிராம் லிங்க் கிடைத்திருக்கிறது. அவர் அதை திறந்து பார்க்க, தன்னுடைய தங்கை மற்றும் அவளது தோழியின் ஆபாசப் படங்கள் இருந்துள்ளன. அதைப்பார்த்து அதிர்ந்துபோனவர், ஆபாசப் படங்களை ஆன்லைனில் வெளியிட்டது யார் எனத் தேடி வந்துள்ளார்.
ஒருவழியாக நண்பர்கள் உதவியுடன் சரத்தை தேடிப்பிடித்த அந்த இளைஞர், சரத்தை தனியிடத்திற்கு அழைத்துச்சென்று கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரத், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த போலீசார், உங்களைத் தாக்கியது யார்? எதற்காக தாக்கினார்கள்? என விசாரித்துள்ளனர். அதற்கு சரத் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதற்கிடையே சரத்தை தாக்கிய அந்த இளைஞர் ஆபாசப் பட விவகாரத்தை அவர்களுடைய உறவினர்களிடம் தெரியப்படுத்தி, திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து புகார் கொடுத்துள்ளார். சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்களின் குடும்பத்தார் சரத் மீது போலீஸில் புகார் அளித்தனர். அதையடுத்து மருத்துவமனையில் இருந்த சரத்தை போலீசார் கைது செய்தனர்.
சரத்தின் செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அதில் 300-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது போலீசாரையே தலைசுற்ற வைத்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாக மார்ஃபிங் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சரத் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விவகாரம் வெளியே தெரிந்ததுமே ஆபாசப் படங்களின் லிங்குகள் இருந்த டெலிகிராம் குரூப்பை சரத் அழித்துள்ளார். இதனால், அந்த ஆபாசப் படங்கள் யார் யாருக்கெல்லாம் விற்கப்பட்டது? இதன் பின்னணியில் வேறு யாரெல்லாம் உள்ளனர்? சரத் இந்தப் படங்களை வைத்து பெண்களை மிரட்டியுள்ளாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்த விவகாரத்தில் கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.