ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாமிலால் (20) – நமிதா (18) தம்பதியர், சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகபுதூரில் தங்கி, சத்தி – கோவை சாலையில் உள்ள எக்ஸல் நூல் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக சத்தியமங்கலம் வந்தவர்கள், அதன்பின்னர் ஆட்டோ பிடித்து வீட்டுக்குக் கிளம்பியுள்ளனர்.
ஆட்டோவில் செல்லும்போது தம்பதியர் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, கைகலப்பாகியுள்ளது. இதில் கோபமடைந்த யாமிலால் அவரது மனைவி நமிதாவை ஆட்டோவிலிருந்து கீழே தள்ளியுள்ளார். இதில் நமிதாவுக்கு தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதையடுத்து அவர்கள் வந்த ஆட்டோவிலேயே தூக்கி போட்டுக்கொண்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். நமீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாமிலாலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.