கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து, கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனிக்கு கார்பன் டை ஆக்ஸைடு கேஸை ஏற்றிக்கொண்டு, கேரளாவைச் சேர்ந்த சஜித் (வயது 34) என்பவர் டேங்கர் லாரியை ஓட்டி வந்தார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே புதுப்பாளையம் பிரிவு சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, டேங்கர் லாரியின் இன்ஜின் பகுதியிலிருந்து திடீரென புகை கிளம்பியுள்ளது. பதறிப்போன டிரைவர் சஜித் லாரியை ஓரம்கட்டி, வண்டியில் இருந்த தீயணைப்புக் கருவியின் மூலம் தீயை அணைக்க முயற்சித்துள்ளார். ஆனால், சில நொடிகளிலேயே லாரியின் கேபின் பகுதி மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்பு நிலைய வீரர்கள், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போராடி டேங்க் பகுதிக்கு தீ பரவாமல் அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து தீ விபத்தில் சேதமான டேங்கர் லாரியில் இருந்த கார்பன் டை ஆக்ஸைடு கேஸை மற்றொரு காலி டேங்கர் லாரியில் மாற்றினர். இதனால் சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரது மாற்றம் செய்யப்பட்டது.