பாறையில் கஞ்சி ஊற்றி சாப்பிட்ட பொதுமக்கள் – மழை வேண்டி விநோத வழிபாடு!
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகேயுள்ள சாமராயபட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான ஆதிகேசவ பெருமாள் கோயில், 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய பாறையின் மீது அமைந்துள்ளது. இங்கு பெருமாள், முருகன், கல்யாண விநாயகர் சன்னதிகள் உள்ளன. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 3ஆவது சனிக்கிழமையன்று மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று (அக்.3) சாமராயபட்டி ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து கஞ்சி சாதம் தயாரித்தனர். கோயிலில் சாமி தரிசனம் முடிந்தபிறகு, பாறையின் மீது அமர்ந்த பொதுமக்களுக்கு பாறையில் உள்ள சிறு சிறு குழிகளில் கஞ்சி சாதம் ஊற்றப்பட்டது. நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என இறைவனை வேண்டி கஞ்சி சாதத்தை சாப்பிட்டனர். பல தலைமுறைகளாக இந்த வழிபாடு பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெறுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் சாமராயபட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

