ரூ.600-க்காக அக்கப்போர்… நண்பன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சுள்ளான்கள் கைது! 

ஈரோடு திண்டல் அருகேயுள்ள வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 45). இவர் தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜோதி (வயது 43) தனியார் கல்லூரியில் தூய்மைப் பணியாளராக உள்ளார். இவர்களது மகன் கோபிநாத் (வயது 22), மேட்டுக்கடையில் உள்ள ஒரு டுவீலர் ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவரின் நண்பரான ஈரோடு உழவன் நகரைச் சேர்ந்த ஜீவானந்தம் (வயது 21), கார் ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வருகிறார்.

கோபிநாத் ஜீவானந்தத்திடம் ரூ.600 பணம் கடனாகப் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. வாங்கிய பணத்தைத் திருப்பிக் கேட்டப்போது, கோபிநாத் ஜீவானந்தத்தை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், இருவருக்குமிடையே பிரச்னை எழுந்துள்ளது. இந்நிலையில், செப் 20ஆம் தேதி தாங்கள் வேலை செய்யும் ஒர்க்‌ஷாப்பில் இருந்த வாடிக்கையாளரின் காரை எடுத்துக்கொண்டு இரவு 9 மணியளவில் தனது தம்பி (17 வயது) மற்றும் நண்பரான ஜேக் (எ) நவீன் (வயது 21) ஆகியோருடன் கோபிநாத்தின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் இரவு 1.30 மணியளவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்கவே, கோபிநாத்தின் தாய் ஜோதி ஜன்னல் கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது வெளியே நின்றிருந்த ஜீவானந்தம் உள்ளிட்ட கும்பல் கண்மூடித் திறப்பதற்குள் பெட்ரோல் பாட்டிலில் தீயைக் கொளுத்தி வீட்டின் மீது வீசியுள்ளனர்.

இதில் ஜன்னல் அருகே நின்ற ஜோதியின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெருந்துறை போலீசார், பெட்ரோல் குண்டு வீசிய ஜேக் (எ) நவீன், ஜீவானந்தம் மற்றும் அவரின் 17 வயது தம்பி ஆகிய மூவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். ஜேக் (எ) நவீன் மற்றும் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் பெருந்துறை கிளைச் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை ஈரோடு நீதிக் குழுமத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top