September 23, 2026

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

‘காட்டிக் கொடுத்த ஜிபே’ – கையும் களவுமாகச் சிக்கிய ‘கல்லா’ அதிகாரிகள்   

‘கையில ரொக்கமா லஞ்சம் வாங்கினாத்தானே சிக்குவோம்!’ என ஐடியா மணி போல யோசித்து, ‘ஜி-பே பண்ணிடுங்க பாஸ்’ என டிஜிட்டல் முறையில் கல்லா கட்டிய அரசு அதிகாரிகளை ரெய்டு நடத்தி அதிர வைத்திருக்கிறது திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை! கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி வரை ஒப்பந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்குச் சொந்தமான 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று (செப். 22) சோதனையில் நடத்தினர்.   அந்தவகையில், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளர் சசிலேகா தலைமையில் 12 பேர் கொண்ட டீம், மாலை 4 மணியளவில் அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் நுழைந்தது. இரண்டு பிரதான நுழைவு வாயில்களையும் பூட்டி, நகராட்சி அலுவலகத்தை தங்களுடைய முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். வழக்கமாக லஞ்ச ஒழிப்புத்துறைச் சோதனைகளின் போது அலுவலக மேஜை டிராயர்கள், ஃபைல்கள் ஆகியவற்றையே அதிகாரிகள் தேடுவார்கள். ஆனால் இம்முறை, நகராட்சி மேலாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளின் ஸ்மார்ட்போன்களையும் அதிரடியாகப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புப் படையினர், அவர்களின் ஜி-பே, போன்பே உள்ளிட்ட UPI ஆப்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அலசி ஆராய்ந்தனர். இரவு 11 மணி வரை சுமார் 7 மணி நேரம் இடைவிடாது நடைபெற்ற இந்த ரெய்டில், கணக்கில் காட்ட முடியாத சந்தேகத்திற்கு இடமான முறையில் ஜி-பே மூலம் மட்டும் ரூ.6,53,767 பெறப்பட்டது தெரியவந்தது. இதில் சுகாதார ஆய்வாளர் அரவிந்த் என்பவரது ஜி-பே கணக்கில் ரூ.5,53,767 பணமும், நகராட்சி மேலாளர் செல்வகுமார் என்பவரது கணக்கில் ரூ.1,00,000 பணமும் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய தொகைக்கு எந்தவித உரிய ஆவணங்களையோ அல்லது நியாயமான விளக்கத்தையோ அளிக்க முடியாமல் இரு அதிகாரிகளும் திணறிப் போயினர். இதனைத் தொடர்ந்து, கணக்கில் வராத பணத்தை ஆன்லைனில் பெற்ற லஞ்சப் பணம் என சுகாதார ஆய்வாளர் அரவிந்த் மற்றும் மேலாளர் செல்வகுமார் ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இந்தச் சோதனையின் போது சிக்கிய சந்தேகத்திற்குரிய 11 முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ள அதிகாரிகள், இதில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளின் பற்றிய விசாரணையில் இறங்கியுள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த அதிரடி வேட்டை, ‘இனி ஜி-பேவில் வாங்கினாலும் தப்பிக்க முடியாது’ என ஊழல் அதிகாரிகளிடத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

ரூ.600-க்காக அக்கப்போர்… நண்பன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சுள்ளான்கள் கைது! 

ஈரோடு திண்டல் அருகேயுள்ள வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 45). இவர் தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜோதி (வயது 43) தனியார் கல்லூரியில் தூய்மைப் பணியாளராக உள்ளார். இவர்களது மகன் கோபிநாத் (வயது 22), மேட்டுக்கடையில் உள்ள ஒரு டுவீலர் ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவரின் நண்பரான ஈரோடு உழவன் நகரைச் சேர்ந்த ஜீவானந்தம் (வயது 21), கார் ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வருகிறார். கோபிநாத் ஜீவானந்தத்திடம் ரூ.600 பணம் கடனாகப் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. வாங்கிய பணத்தைத் திருப்பிக் கேட்டப்போது, கோபிநாத் ஜீவானந்தத்தை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், இருவருக்குமிடையே பிரச்னை எழுந்துள்ளது. இந்நிலையில், செப் 20ஆம் தேதி தாங்கள் வேலை செய்யும் ஒர்க்‌ஷாப்பில் இருந்த வாடிக்கையாளரின் காரை எடுத்துக்கொண்டு இரவு 9 மணியளவில் தனது தம்பி (17 வயது) மற்றும் நண்பரான ஜேக் (எ) நவீன் (வயது 21) ஆகியோருடன் கோபிநாத்தின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இரவு 1.30 மணியளவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்கவே, கோபிநாத்தின் தாய் ஜோதி ஜன்னல் கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது வெளியே நின்றிருந்த ஜீவானந்தம் உள்ளிட்ட கும்பல் கண்மூடித் திறப்பதற்குள் பெட்ரோல் பாட்டிலில் தீயைக் கொளுத்தி வீட்டின் மீது வீசியுள்ளனர். இதில் ஜன்னல் அருகே நின்ற ஜோதியின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெருந்துறை போலீசார், பெட்ரோல் குண்டு வீசிய ஜேக் (எ) நவீன், ஜீவானந்தம் மற்றும் அவரின் 17 வயது தம்பி ஆகிய மூவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். ஜேக் (எ) நவீன் மற்றும் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் பெருந்துறை கிளைச் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை ஈரோடு நீதிக் குழுமத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

Scroll to Top