கைகூடாத காதல்… சோகத்தில் கல்லூரி பேராசிரியை எடுத்த விபரீத முடிவு! 

ஈரோடு, பெரியசேமூர் தென்றல் நகர் பகுதியைச்  சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகள் ரம்யாஸ்ரீ (வயது 26). பெற்றோருடன் சூரம்பட்டி குமணன் வீதியில் வசித்து வந்தார். எம்.இ. பட்டதாரியான ரம்யாஸ்ரீ, ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். கல்லூரியில் படித்தபோது இவருக்கும், ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், ரம்யாஸ்ரீக்கு அந்த இளைஞர் மீது காதல் வந்துள்ளது. ஆனால், அந்த இளைஞரோ, “நீங்கள் என்னை விட 2 வயது மூத்தவர். இதனால் எங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்” எனக்கூறி, ரம்யாஸ்ரீயின் காதலை ஏற்க மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. 

இதனால் ரம்யாஸ்ரீ மிகுந்த வேதனையில் இருந்துள்ளார். இதற்கிடையே, அந்த இளைஞர் ஏற்கனவே காதலித்து வந்த ஒரு பெண்ணை, இருவீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.

இந்த விஷயம் தெரியவந்ததும் ரம்யாஸ்ரீ மேலும் உடைந்து போயுள்ளார். இதற்கிடையே, அந்த இளைஞரின் தாயார் ரம்யாஸ்ரீக்கு போன் செய்து, “என்னுடைய மகனுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. இனிமேல் அவனுக்கு ஃபோன் செய்தால், அவனது குடும்ப வாழ்க்கையில் உன்னால் பிரச்னை வந்துவிடும். எனவே, இனிமேல் அவனுக்கு ஃபோன் செய்ய வேண்டாம்!” எனக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, கடந்த சில நாட்களாகவே யாரிடமும் பேசாமல் சோகத்தில் மூழ்கியிருந்த ரம்யாஸ்ரீ, கல்லூரிக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார். தொடர்ந்து நீடித்த மன அழுத்தத்தின் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த சூரம்பட்டி போலீசார், ரம்யாஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top