‘லாபம் கொட்டும்… நிறைய முதலீடு செய்யுங்க’ – ஆன்லைன் செயலியை நம்பி ரூ.16 லட்சத்தை பறிகொடுத்த நபர்!
‘பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்’ என ஆசை வார்த்தை காட்டி, பெருந்துறையைச் சேர்ந்தவரிடம் ரூ.16.19 லட்சத்தை ஆன்லைன் செயலி மூலம் சுருட்டிய கும்பலை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (50). இவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதில் ஆர்வம் இருந்துள்ளது. இதுதொடர்பான தகவல்களைச் சமூக வலைதளங்களில் தேடி வந்த நிலையில், அவரது வாட்ஸ்-அப்க்கு பங்குச்சந்தை தொடர்பான ஆலோசனைகள் வந்துள்ளது. ‘எந்த நிறுவன பங்குகளை எப்போது வாங்கினால் லாபம் கிடைக்கும்?’ என அந்த மெசேஜில் இருந்த தகவல்களின்படி கார்த்திகேயன் முதலீடு செய்ய, அவருக்கு ஓரளவிற்கு லாபம் கிடைத்துள்ளது. கார்த்திகேயன் தங்களின் வலையில் விழுந்துவிட்டதை உறுதி செய்த அந்த ஆன்லைன் கும்பல், தங்களுடைய சீட்டிங் வேலையை காட்டத் தொடங்கியது. ‘இந்த பிரத்யேக செயலியை (App) பதிவிறக்கம் செய்து முதலீடு செய்தால் இன்னும் அதிகமாகப் பணம் சம்பாதிக்கலாம்’ எனக்கூறி ஒரு லிங்கை அனுப்பியுள்ளனர். அதை முழுமையாக நம்பிய கார்த்திகேயன், அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கடந்த ஜூலை 21-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை பல தவணைகளாக மொத்தம் ரூ.16.19 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அவர் பணத்தை முதலீடு செய்யச் செய்ய, டிரேடிங்கில் அந்தப் பணம் பல்கிப் பெருகி, லட்சக்கணக்கில் லாபம் வந்ததைப் போல செயலியில் காட்டியுள்ளது. இதைப்பார்த்த கார்த்திகேயன், தன் பணம் பெருகி வருகிறது என்ற ஆசையில் இருந்துள்ளார். செப்டம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு, ஆன்லைன் செயலியில் காட்டிய பெரிய தொகையைத் தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயன்றுள்ளார். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை. சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தபோது, அந்த ஆன்லைன் செயலியே போனிலிருந்து மாயமாகி விட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திகேயன், இது குறித்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் வாட்ஸ்-அப் எண்களை வைத்து ஆன்லைன் மோசடிக் கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



