“என் வழியை மறிப்பியா?” – 70 வயது முதியவர் மீது டிராக்டரை ஏற்றிச் சாய்த்த கொடூரன்! 

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள போத்தநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி காளநாயக்கர் (வயது 70). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 50) என்பவருக்கும் இடையே தோட்டத்திற்குச் செல்லும் வண்டித்தடத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் ரங்கசாமி தனது டிராக்டரில் தோட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த காளநாயக்கர், ரங்கசாமியின் டிராக்டரை வழிமறித்து நிறுத்தியுள்ளார். “வண்டித்தடப் பிரச்சனை முடியும் வரை, இந்தப் பாதையில் வரக்கூடாது!” என  வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, ஆத்திரமடைந்த ரங்கசாமி, தான் ஓட்டி வந்த டிராக்டரை முதியவர் காளநாயக்கர் மீது ஏற்றியுள்ளார். டிராக்டர் சக்கரத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவர் துடிதுடித்து இறந்ததைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த ரங்கசாமி, டிராக்டரை எடுத்துச் சென்று தனது வீட்டின் முன் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி டி.எஸ்.பி சீதாலட்சுமி மற்றும் பவானி போலீசார் காளநாயக்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பவானி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ரங்கசாமியை தேடி வருகின்றனர்.

வண்டித்தடப் பிரச்சனையில் 70 வயது முதியவர் டிராக்டர் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

Scroll to Top