September 17, 2026

Uncategorized, தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“ஏன் ஸ்கூலுக்கு வரல..?” – கேள்வி கேட்ட தலைமையாசியரை தாக்கிய பள்ளி மாணவர்கள்

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கர்னல் (54). இந்தப் பள்ளியில் பிளஸ் டூ படித்துவரும் மாணவர்கள் 6 பேர், தினசரி வகுப்புகளுக்கு வராமல், நேரடியாக காலாண்டுத் தேர்வெழுத மட்டும் வந்துள்ளனர். இந்தத் தகவல் பள்ளியின் தலைமையாசிரியரான கர்னல் கவனத்துக்கு சென்றுள்ளது. அதையடுத்து அவர் அந்த மாணவர்களை அழைத்து, பள்ளிக்கு தொடர்ச்சியாக வராததற்கான காரணத்தைக் கேட்டு விசாரித்துள்ளார். மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொல்ல,  “ஸ்கூலுக்கு தொடர்ந்து வராமல், தேர்வெழுத அனுமதிக்க முடியாது” எனச் சொல்லி கண்டித்து அனுப்பியுள்ளார்.   சிறிது நேரத்தில் திபுதிபுவென தலைமையாசிரியர் அறைக்குள் புகுந்த அந்த பிளஸ் டூமாணவர்கள், தலைமையாசிரியரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு அருகிலுள்ள வகுப்பறையில் இருந்த ஆசிரியர்கள் ஓடிவந்து பார்த்தபோது, மாணவர்கள் தாக்கியதில் தலைமையாசிரியர் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. காயமடைந்த தலைமையாசிரியரை கல்லம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு பள்ளிக்குத் திரும்பினார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து, தலைமையாசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களை தனித்தனியாக அழைத்து  விசாரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் அவர்கள், “தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியது மோசமான செயல். சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

தலைப்புச் செய்திகள், மாவட்டம்

“என் வழியை மறிப்பியா?” – 70 வயது முதியவர் மீது டிராக்டரை ஏற்றிச் சாய்த்த கொடூரன்! 

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள போத்தநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி காளநாயக்கர் (வயது 70). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி (வயது 50) என்பவருக்கும் இடையே தோட்டத்திற்குச் செல்லும் வண்டித்தடத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் ரங்கசாமி தனது டிராக்டரில் தோட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த காளநாயக்கர், ரங்கசாமியின் டிராக்டரை வழிமறித்து நிறுத்தியுள்ளார். “வண்டித்தடப் பிரச்சனை முடியும் வரை, இந்தப் பாதையில் வரக்கூடாது!” என  வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, ஆத்திரமடைந்த ரங்கசாமி, தான் ஓட்டி வந்த டிராக்டரை முதியவர் காளநாயக்கர் மீது ஏற்றியுள்ளார். டிராக்டர் சக்கரத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவர் துடிதுடித்து இறந்ததைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த ரங்கசாமி, டிராக்டரை எடுத்துச் சென்று தனது வீட்டின் முன் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி டி.எஸ்.பி சீதாலட்சுமி மற்றும் பவானி போலீசார் காளநாயக்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பவானி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ரங்கசாமியை தேடி வருகின்றனர். வண்டித்தடப் பிரச்சனையில் 70 வயது முதியவர் டிராக்டர் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Scroll to Top