பறந்து வந்து விழுந்த கார்; ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி – நாமக்கல்லில் சோகம் 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள மோளயாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார் (வயது 35). இவர் கயிறு தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். இவரின் மனைவி காவ்யாஸ்ரீ (வயது 34), பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கார்த்திக் குமாரின் தந்தை செல்வராஜ் (வயது 60), தாய் காந்திமதி (55) ஆகியோரும் இவர்களுடன் பெங்களூரூ ஈஜிபுரா பகுதியில் வசித்து வந்தனர். காவ்யாஸ்ரீ தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

இந்நிலையில், கரூரில் உள்ள உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, கார்த்திக் குமார் மற்றும் அவரது பெற்றோர் நேற்று (செப்டம்பர் 15) இரவு பெங்களூருவில் இருந்து கரூருக்கு காரில் கிளம்பியுள்ளார். இன்று (செப்டம்பர் 16) அதிகாலை சுமார் 2 மணியளவில், நாமக்கல் நல்லிபாளையம் அருகே சேலம் – கரூர் பைபாஸில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்திசையில் பெங்களூரூ நோக்கிச் சென்று கொண்டிருந்த தார் ஜீப் ஒன்று, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனைத் தாண்டி பறந்து வந்து, கார்த்திக் குமாரின் காரின் மீது விழுந்ததில், கார் சுக்குநூறாக நொறுங்கியதோடு, காரில் இருந்தவர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லிபாளையம் போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் குமார், அவரது தந்தை செல்வராஜ், தாய் காந்திமதி ஆகிய மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிட்டனர்.

நல்லிபாளையம் போலீஸார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய தார் ஜீப்பை ஓட்டியவர் பெங்களூரூவைச் சேர்ந்த கிருஷ்ணகவுடா (19) என்பதும், காரில் யதுநாதன் (19), சிவகுமார் (32), கௌதமி (30) என மொத்தம் 4 பேர் பயணித்ததும் தெரியவந்தது. தற்போது நால்வரும் பெங்களூரூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகவுடா ஜீப்பை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஒருவரின் கவனக்குறைவு ஒரு குடும்பத்தையே காவு வாங்கியுள்ளது.

Leave a Comment

Your name will appear with your comment.

தலைப்புச் செய்திகள்

பிற செய்திகள்

Scroll to Top