ஈரோடு மாவட்டம், பவானி காவிரி வீதியைச் சேர்ந்தவர் அமுதவள்ளி (வயது 48). இவரது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. மகளுக்காக சிறுகச் சிறுகச் சேர்த்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் 60 கிராம் வெள்ளிப் பொருட்களை, ஈரோடு நாட்ராயன் கோவில் வீதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் அமுதவள்ளி பாதுகாப்பாகக் கொடுத்து வைத்திருந்துள்ளார்.
திருமணத் தேதி நெருங்கியதால், ஈரோடு உறவினர் வீட்டிற்குச் சென்றவர், அவர்களிடம் கொடுத்து வைத்திருந்த தங்க நகைகளை வாங்கி, ஒரு பையில் பத்திரமாக எடுத்துக்கொண்டு பவானிக்குத் திரும்பினார். ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பவானி செல்ல அரசு டவுன் பஸ்ஸில் ஏறிய அமுதவள்ளி, கூட்டம் அதிகமாக இருந்ததாலும், நகைப் பை கைநழுவி கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்திலும், தனக்கு அருகில் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம், “கொஞ்சம் இந்த பையை பிடிச்சுக்கோங்க அக்கா” எனக் கூறி நகைப் பையைக் கொடுத்துள்ளார்.
பஸ் ஈரோடு கோணவாய்க்கால் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, சீட்டில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி நகைப் பையோடு சத்தமில்லாமல் பேருந்திலிருந்து கீழே இறங்கிச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்த அமுதவள்ளி, தன் கைப்பையை வைத்திருந்த பெண் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, “ஐய்யோ… என் மகளோட கல்யாண நகை போச்சே!” எனக் கத்திக்கதறி கூச்சல் போட்டுள்ளார். உடனே, கண்டக்டர் பஸ்ஸை ஓரங்கட்டி நிறுத்தி, பஸ்ஸில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தியுள்ளார். ஆனால், நகை வைத்திருந்த பெண் ஏற்கனவே இறங்கிச் சென்றுவிட்டதால் நகை கிடைக்கவில்லை.
இதையடுத்து, இழந்த தன்னுடைய நகையை மீட்டுத்தரச் சொல்லி, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அமுதவள்ளி கண்ணீருடன் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகையோடு தப்பிச் சென்ற பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.